ஹிமாச்சலில் பயங்கரம்: நிலச்சரிவில் சிக்கி பேருந்து மண்ணில் புதைந்து 15 பயணிகள் உயிரிழப்பு!

ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனியார் பேருந்து சிக்கியதில் 15 பயணிகள் உயிரிழந்தனர்.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் மரோட்டானில் இருந்து குமர்வின்னை நோக்கி தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று நேற்று மாலை பயணித்துக் கொண்டிருந்தது. ஜன்டுட்டா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மலைப்பாதையான பாலுகாட் பகுதியில் பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது அப்பகுதியில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பேருந்து சிக்கியதில் அதில் பயணித்த 30 பேரில் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்தனர் என்று பிலாஸ்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், நிலச்சரிவில் சிக்கிய பேருந்து மற்றும் பயணிகளை மீட்கும் பணியை முழுவீச்சில் மேற்கொண்டனர். நிலச்சரிவு நிகழ்ந்த பகுதியில் திங்கள்கிழமை முதல் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்துவருவதன் காரணமாக நிலச்சரிவு நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் போது அவ்வழியாக நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பிலாஸ்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவரது தந்தை ராஜ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், "எனது மனைவி, இரண்டு மகன்கள், எனது சகோதரரின் மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உள்ளூரில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பெரிய பாறை ஒன்று வேகமாக உருண்டு வந்து பேருந்தின் மீது விழுந்தது. பாறை மோதிய வேகத்தில் பேருந்து மண்ணில் புதைந்தது. இந்த விபத்தில் சிக்கிய பயணிகளில் யாரும் உயிர்பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை" என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான ராஜ் குமார் கூறினார்.
ரூ.2 லட்சம் நிவாரணம்: இந்தப் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த துணை முதல்வர்: இந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ஹிமாச்சல பிரதேச மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு, மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகத்தை அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில், குலு பகுதியில் நடைபெற்ற தசரா விழாவில் பங்கேற்றிருந்த மாநில துணை முதலமைச்சர் முகேஷ் அக்னிஹோத்ரி, விபத்து குறித்த தகவலறிந்ததும் உடனே பிலாஸ்பூர் மாவட்டத்துக்கு விரைந்துள்ளார் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளனர்.