நான் யார் தெரியுமா? உணவகத்தில் பணம் தர மறுத்து காவலர் மகன் ரகளை

நான் யார் தெரியுமா? உணவகத்தில் பணம் தர மறுத்து காவலர் மகன் ரகளை

பள்ளிகொண்டா பகுதியில் உணவகத்தில் பணம் தர மறுத்து பெண் காவல் ஆய்வாளரின் மகன் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாபு என்பவர் துரித உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி அன்று இரவு வழக்கம் போல் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது பள்ளிகொண்டா அமானி நகரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மகன் மனோஜ் (24) தனது நண்பருடன் உணவகத்திற்கு வந்துள்ளார். அங்கு 2 நூடுல்ஸ் மற்றும் 2 சிக்கன் ரைஸ் ஆகியவற்றை பார்சலாக வாங்கியுள்ளார். பின்னர், கூடுதலாக முட்டைகளை சேர்த்து கேட்ட போது, உணவக ஊழியர்கள் தர மறுத்துள்ளனர்.

இதனையடுத்து மனோஜ் மற்றும் அவரது நண்பரும் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக அவர்கள் கேட்டபடி முட்டைகளை சேர்த்து வழங்கியுள்ளனர். பிறகு உணவிற்கான பணத்தை உணவக உரிமையாளர் பாபு கேட்ட போது, மனோஜ், “நான் யார் என்று தெரியுமா? என் அம்மா காவல் துறை எஸ்ஐயாக உள்ளார். என்னிடமே நீ பணம் கேட்கிறாயா?” என தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மனோஜ் உணவக உரிமையாளர் பாபுவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் கடையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையை எடுத்து அடிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த கடை ஊழியர்கள் மனோஜை தடுத்து நிறுத்தினர்.

இது குறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது போலீசார் முன்னிலையிலேயே மனோஜ் மீண்டும் உணவக உரிமையாளரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் மனோஜை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்ற போது அவர் குடிபோதையில் இருந்ததால், அவரை அங்கிருந்து அனுப்பி வைத்து, அவரது இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இதற்கிடையில், உணவகத்தில் நடந்த இந்த ரகளை சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக நேற்று உணவக உரிமையாளர் பாபு போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.