கோவையில் காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை உயிரிழப்பு!

கோவையில் காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை உயிரிழப்பு!

உடலில் காயங்களுடன் சுற்றி வந்த மக்னா யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான ஆனைகட்டி மலை தமிழக - கேரளா எல்லையில் அமைந்துள்ளது. இதனால், கேரளா வனப் பகுதியிலிருந்து தமிழக வனப்பகுதிக்குள் யானைகள் இடம் பெயர்வது நடக்கிறது. மேலும், யானைகள் பவானி ஆற்றுப் பகுதி வழியாகவும், வனப்பகுதி வழியாகவும் தமிழக எல்லைக்குள் நுழைவது வழக்கம்.

காயங்களுடன் வந்த யானைக்கு சிகிச்சை

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக உடலில் காயங்களுடன் கேரளா வனப் பகுதியிலிருந்து வெளியேறிய மக்னா யானை ஒன்று, தமிழக வனப் பகுதியான கூடப்பட்டி என்ற மலைவாழ் கிராமத்திற்கு அருகே வந்துள்ளது. இதனைப் பார்த்த பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் அந்த யானைக்கு பழங்கள் மூலம் மருந்துகள் வைத்து, சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

ஆனால், அந்த யானை தமிழ்நாடு மற்றும் கேரளா வனப் பகுதிக்கும் மாறி மாறி சென்று வருவதால், சிகிச்சை அளிப்பதில் சிக்கல் தொடர்ந்தது. இந்நிலையில் அந்த மக்னா யானை பவானி ஆற்றின் மையப்பகுதியில் நின்று கொண்டிருந்துள்ளது. அதனை கண்ட அப்பகுதி மக்கள் தமிழக வனத் துறைக்கும், கேரளா வனத்துறைக்கும் தகவல் அளித்தனர்.

அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த இரு மாநில வனத் துறையினரும், அந்த யானையை கண்காணித்து வந்தனர். அதற்கு பழங்கள் மூலமாக மருந்துகள் கொடுக்கப்பட்டன. யானை நல்ல ஆரோக்கியத்துடன் காணப்பட்டதால் மருத்துவர்கள் அளிக்கக் கூடிய மருந்துகளை சாப்பிட்டு வந்தது. வனக் கால்நடை மருத்துவர் வெண்ணிலா தலைமையிலான மருத்துவ குழுவினர் மக்னா யானையை கண்காணித்து வந்தனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த யானை

இதுதவிர பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்தை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் யானையை கண்காணித்து, அதன் காயத்திற்கு மருந்து போட்டும், பழங்கள், வாழை தண்டுகளில் மாத்திரைகள் வைத்தும் வழங்கினர். இந்நிலையில், நேற்று (அக்.69) வழக்கம் போல் யானைக்கு சிகிச்சை அளித்து விட்டு வனப் பணியாளர்கள் வந்த நிலையில், ஒரு குழுவினர் மட்டும் யானையை கண்காணித்து வந்தனர்.

அப்போது இரவு 8 மணியளவில் மக்னா யானை திடீரென கீழே விழுந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், அருகில் சென்று பார்த்த போது யானை உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகளின் உத்தரவின் பேரில் இன்று காலை (செவ்வாய்க்கிழமை) பிரேதப் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

யானையின் உடல் முழுவதும் காயம்

அந்த வகையில், இன்று காலை வனக்கால்நடை மருத்துவர் வெண்ணிலா தலைமையிலான மருத்துவக் குழுவினர் உயிரிழந்த யானையின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர். அப்போது யானையின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.

இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், “கேரளா வனப் பகுதியிலிருந்து தமிழக வனப்பகுதிக்குள் காயங்களுடன் வந்த சுமார் 28 வயது மதிக்கத்தக்க மக்னா யானைக்கு, மருத்துவ குழுவினர் கடந்த சில நாட்களாக பல்வேறு சிகிச்சைகளை அளித்து வந்தனர்.

இருப்பினும், யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. யானைக்கு செய்யப்பட்ட உடற்கூறு பரிசோதனையில், அதிகளவிலான காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காயங்கள் அனைத்தும் மற்றொரு ஆண் யானையுடன் ஏற்பட்ட மோதலில் வந்த காயங்கள் என்பதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது“ எனத் தெரிவித்தார்.