அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22 ஆம் தேதி அரசு சார்பில் பேச்சுவார்த்தை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22 ஆம் தேதி அரசு சார்பில் பேச்சுவார்த்தை

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் வரும் 22 ஆம் தேதி அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், சிறப்புக் காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூர்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நவம்பர் 18 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்தனர். அந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு பள்ளி கல்வித் துறை ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்தது.

தொடர்ந்து, டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து டிசம்பர் 27 ஆம் தேதி வேலைநிறுத்த மாநாடு நடத்தப்படவுள்ளதாகவும், அப்போதும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 2026 ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.

ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களும் நேற்று (டிச.18) போராட்டம் நடத்தினர். அதே போல், செவிலியர்களும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளதை நிறைவேற்ற வேண்டும் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.