டி20 போட்டிகளை மதியம் நடத்துங்கள்... அஸ்வின் யோசனை

டி20 போட்டிகளை மதியம் நடத்துங்கள்... அஸ்வின் யோசனை

டி20 போட்டிகள் இரவில் நடைபெறுவதால் பனிப்பொழிவு காரணமாக இரு அணிகளின் பவுலர்களும் பீல்டர்களூம் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர், இதனைத் தவிர்க்க டி20 போட்டிகளை மதியம் நடத்தலாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பரிந்துரைத்துள்ளார்.

இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றதையடுத்து மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பனிப்பொழிவு (Dew) தொடர்பாக தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த போட்டியில் 36 ஓவர்களுக்குள் 400-க்கும் மேற்பட்ட ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

209 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய இந்திய அணி, வெறும் 15.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. ஆனால், போட்டியின் போது பந்து பனிப்பொழிவால் நனைந்ததால் பந்து வீச்சாளர்கள் கட்டுப்பாட்டை இழந்ததாக அஸ்வின் குறிப்பிட்டார்.

தன் அஷ் கி பாத் நிகழ்ச்சியில் அஸ்வின் கூறும்போது, “இத்தகைய போட்டிகளை மதிய நேரத்தில் நடத்தலாம். நியூசிலாந்து போன்ற அணிகளுக்கு இது பெரிய பிரச்சினை அல்ல. ஆனால் இந்திய அணியில், ஒருவர் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடாமல், மூன்றாவது போட்டியில் இத்தகைய சூழலில் பந்து வீசி அதிக ரன்கள் கொடுத்தால், அவரது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். இது நியாயமல்ல.

பனிப்பொழிவு இருந்தால் பகல் நேரத்தில் போட்டிகளை நடத்தலாம் அல்லது வேறு மைதானங்களை தேர்வு செய்யலாம். பிற நாடுகளில் ஒவ்வொரு மைதானத்திற்கும் விக்கெட் தன்மை, சராசரி ஸ்கோர் போன்ற பதிவுகள் உள்ளன. நாமும் அதைப் போல செய்ய வேண்டும்.

பனிப்பொழிவு வந்துவிட்டால் திறமைக்கு இடமில்லை. டாஸ்தான் முக்கியமாகிவிடும். ஒரு பன்னாட்டு உலகக் கோப்பை இவ்வாறு பனிப்பொழிவால் தீர்மானிக்கப்படக் கூடாது. திறமையே முன்னிலையில் இருக்க வேண்டும்,” என்று அஸ்வின் தெரிவித்தார்.

வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையின் இந்திய கட்ட போட்டிகள் பனிப்பொழிவால் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் அஸ்வின் வலியுறுத்தினார்.