தீபாவளிக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! திணறும் தாம்பரம் ரயில் நிலையம்!

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்! திணறும் தாம்பரம் ரயில் நிலையம்!

: தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் அதிகளவில் குவிந்துள்ளதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வருகிற 20, 21 ஆகிய நாட்களில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை, பெரும்பாலானோர் சென்னை போன்ற பெருநகரங்களில் வேலைக்காக வந்து தங்கியுள்ளனர். இவர்கள் பண்டிகை நாட்களை சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடவே விரும்புகின்றனர். இதனால் ஒவ்வொரு பண்டிகையின்போதும் ஒருசில நாட்களுக்கு முன்பாகவே பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுவது வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில் சென்னை மாநகரில் தங்கி படிக்கும் மாணவர்கள், பணிபுரிபவர்கள் என லட்சக்கணக்கான நபர்கள் தீபாவளியை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதனை கருத்தில்கொண்டு அக்.16 முதல் தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. அதேபோல் அக்.16 மாலை முதல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதுதவிர, பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த வாகனங்களில் ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். ஒரே நேரத்தில் பலர் செல்வதாலும், புத்தாடை, பட்டாசுகள் வாங்க கடைகளுக்கு செல்வதாலும் சென்னையின் முக்கிய சாலையான குரோம்பேட்டை, தாம்பரம் சாலையில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே நேற்றைய முந்தைய தின மாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். குறிப்பாக கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கேரளா ஆகிய பகுதிகளுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொதுமக்கள் அதிகளவில் பயணித்து வருகின்றனர். மேலும் முன்பதிவில்லா பெட்டிகளிலும் கால் வைக்கமுடியாத அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது.

குறிப்பாக, தினமும் இரவு 11.50 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் 22 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லா விரைவு ரயிலில் செல்வதற்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிகின்றனர். இதனால் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளதால் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் தங்கள் உடமைகளை பாதுகாத்துக் கொள்ள போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.