நான் இருப்பதையே திமுக மறந்து விட்டது - சசிகலா பேட்டி

நான் இருப்பதையே திமுக மறந்து விட்டது - சசிகலா பேட்டி

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தனக்கு எதிரியே இல்லை என திமுக நினைத்துக் கொண்டு இருக்கிறது. நான் ஒருத்தி இருப்பதை மறந்து விட்டு பேசி வருகிறது என சசிகலா பேட்டியளித்துள்ளார்.

அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு சசிகலா மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது மக்களுக்காக பாடுபட்டார். குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். மக்களுக்கு என்ன தேவையோ அதையே செய்து, எப்போதும் மக்களை சுற்றியே வாழ்ந்து வந்தார். நிதி பிரச்சினைகள் இருந்த போதும் பல திட்டங்களை கொண்டு வந்தார். தமிழகத்தில் இன்று 400 பொறியியல் கல்லூரிகள் உள்ளது என்றால் அதற்கு புரட்சி தலைவர் தான் காரணம். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காகவே வாழ்ந்தவர்கள்” என்றார்.

தற்போது உள்ள நடைமுறையை பற்றி பேச வேண்டும் அல்லவா? என்று கூறிய அவர், “முதல்வர் கார் ஓட்டுகிறார், எம்ஜிஆர் பாடல்களை கேட்கிறார். ஆனால் எம்ஜிஆர் பாடல்களில் கூறியுள்ளாது போல அவர் நடந்து கொள்வதில்லை. இப்போது கூட தேர்தலில் வாக்கு வாங்க வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகையே திமுக வழங்குகிறது.

திமுகவை நம்பி வாக்களித்த மக்களுக்கு முதல்வர் சரியாக பணிகளை மேற்கொண்டிருக்கலாம். தேர்தல் வரும் நேரத்தில் விலைவாசியை அரசு குறைக்கிறது. நிர்வாகத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. தமிழ், திராவிடம் என சொல்லி எத்தனை நாட்கள் மக்களை ஏமாற்ற முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “இப்போது ‘உங்க கனவ சொல்லுங்க’ என ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படியென்றால் மக்கள் கனவு மட்டும் தான் காண வேண்டுமா? மக்கள் என்ன நினைக்கிறார்கள், நமக்கு வாக்களிப்பார்களா என்பதை தெரிந்து கொள்ளவே இந்த திட்டம்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை எப்படி பார்க்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, குட்டி கதை சொல்கிறேன் என்று சசிகலா ஆரம்பித்தார். “ஒரு பெரிய கருங்கல் மலை இருந்தது. ஒரு ஆள் ஒரு பெரிய கடப்பாரையை கொண்டு அந்த மலையை பெயர்த்தெடுக்க நினைக்கிறார். எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. ஆனால் அந்த மலையில் ஒரு ஆறடி உயரத்தில் மரம் ஒன்று வளர்ந்திருக்கிறது.

இவ்வளவு கடினமான பாறையில் மரம் எப்படி முளைத்தது? என பார்க்கிறார். அப்போது அந்த மரம் சொல்லாமல் சொல்கிறது. ஒரு விதையிலிருந்து மரம் முளைத்தது. அந்த விதையிடமிருந்தது வெறும் அன்பு மட்டும் தான். அந்த அன்பினால் தான் மரம் வளர்ந்தது. இந்த கதையின் அர்த்தத்தை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்” என்றார்.

தொடர்ந்து வரும் தேர்தல் குறித்து பேசிய சசிகலா, “உண்மையான மக்களாட்சியை இரண்டு தலைவர்கள் தான் நடத்தினார்கள். அதில் மாற்றுக் கருத்தே கிடையாது. இப்போது இருக்கிறவர்கள் எல்லாம் பேசிக் கொண்டு மட்டும் தான் உள்ளனர். கண் எட்டிய தொலைவு வரைக்கும் எதிரியே இல்லை என திமுக நினைத்துக் கொண்டிருக்கிறது. நான் ஒருத்தி இருப்பதையே மறந்துவிட்டு பேசி வருகிறது” என்றார்.