"அந்த அடையாளம்... அதுக்கு தான் சினிமாவுக்கு வந்தேன்" - மனம் திறந்த இயக்குநர் மாரி செல்வராஜ்!

"அந்த அடையாளம்... அதுக்கு தான் சினிமாவுக்கு வந்தேன்" - மனம் திறந்த இயக்குநர் மாரி செல்வராஜ்!

“சாதி, மதங்களை எதிர்த்து மாரி செல்வராஜ் படம் எடுப்பார் என்ற அடையாளம் எனக்கு பிடித்திருக்கிறது. அந்த அடையாளத்தை நிரூபிக்கவே நான் திரைத்துறைக்கு வந்தேன். எனவே, இதை விரும்புகிறேன்” என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்த திரைப்படம் ‘பைசன்’ (Bison Kaalamaadan). இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 17ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

‘பைசன்’ திரைப்படம் ‘அர்ஜுனா விருது’ வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், படக்குழு பல்வேறு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில், மாரி செல்வராஜ், நடிகர்கள் அமீர், ரஜீஷா விஜயன் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா ஆகியோர் திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கில் ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ், “பைசன் படத்தை மக்கள் முழு மனதோடு கொண்டாடி வருகின்றனர். மக்களின் வரவேற்பே தொடர்ந்து இதுபோன்ற படங்கள் எடுப்பதற்கு உந்துதலாக இருக்கிறது. சாதி, மதங்களை எதிர்த்து மாரி செல்வராஜ் படம் எடுப்பார் என்ற அடையாளம் எனக்கு பிடித்திருக்கிறது. அந்த அடையாளத்தை நிரூபிக்கவே நான் திரைத்துறைக்கு வந்தேன். எனவே, அந்த அடையாளத்தை நான் விரும்புகிறேன்.

மக்கள் நம்மை ஏற்றுக்கொள்ளும்போது, நம்மை திசை திருப்புவதற்காக செய்கின்ற வேலைகளை நாம் மனதில் ஏற்றிக்கொள்ளக்கூடாது. எனது படைப்புகள் மக்களை நோக்கியே பயணிக்கும். எனது படத்தை தனியாக பார்த்தால் விமர்சிப்பவர்களின் கருத்துகள் மாறும். அடுத்த கட்டமாக காமெடி மற்றும் குழந்தைகள் விரும்பும் படங்களை எடுப்பதற்கு முயற்சி செய்து வருகிறேன். விரைவில் அது மாதிரியான படங்களை என்னிடம் நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்றார்.

அடுத்து பேசிய நடிகர் அமீர், “சாதி, மத மோதல்கள் நீங்க வேண்டும். மனிதர்களை மனிதர்கள் நேசிக்க வேண்டும். ‘வடசென்னை’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர்கள் அறிவிப்பார்கள், 2026 தமிழ்நாடு தேர்தல் தொடர்பான எனது நிலைப்பாட்டை ஜனவரி மாதம் அறிவிப்பேன்” என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் பசுபதி, “யாரோ பத்து பேர் படத்தை தவறாக பேசுவதை கருத்தில் கொள்ள வேண்டாம். மக்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். பத்து பேருக்கு பதில் கூறுவதை தவிர்த்து, விலகி நிற்பதே நல்லது” என்றார்.