'இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் அல்ல' - மனம் திறந்த நரேந்திர மோடி
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே கையெழுத்தாகி உள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது 'பகிர்ந்து கொள்ளப்பட்ட செழிப்புக்கான ப்ளூ பிரிண்ட்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பங்கேற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியதாக அறிவிக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை வர்ணித்துள்ள பிரதாமர் மோடி, '' இந்த ஒப்பந்தம் அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என்றும் இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் அல்ல, பகிர்ந்து கொள்ளப்பட்ட செழிப்புக்கான ப்ளூ பிரிண்ட்'' என்று கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.
அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ''இந்திய குடியரசு தின விழாவில் முதன் முறையாக ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அதற்கு மறுநாளே இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இது, இந்தியா-ஐரோப்பிய உறவுகளில் நிகழ்ந்து இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க தருணம்'' என கூறினார்.
இரு தரப்பு உறவுகளை குறித்து தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, '' இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவு சமீப காலங்களில் அதிவேகமாக வளர்ந்துள்ளது. இரு தரப்பிலிடையிலான வர்த்தகம் 180 பில்லியன் யூரோவாக உள்ளது. ஜனநாயகம், பொருளாதார ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில், நமது இருதரப்பு வலிமை புதிய உயரங்களை எட்டியுள்ளது. மேலும், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர்.
தற்போது கையெழுத்தாகி உள்ள ஒப்பந்தம், இந்தியா இதுவரை செய்துள்ள ஒப்பந்தகளில் மிக மிகப்பெரியதாகும். இந்தியா அதன் வரலாற்றில் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை இன்று முடித்துள்ளது. இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு உதவும். ஐரோப்பிய சந்தைகளை அதிக அளவில் அணுகவும் உதவும், மேலும் சேவைத் துறையில் ஒத்துழைப்பை ஆழப்படுத்தும். ஐரோப்பிய யூனியன் இடையிலான விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும்'' என்றார்.
மேலும், இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே பாதுகாப்பு மற்றும் ராணுவக் கூட்டு ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானதன் மூலம், ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்குப் பிறகு ஐரோப்பிய யூனியனுடன் அத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொண்ட மூன்றாவது ஆசிய நாடாக இந்தியா திகழ்கிறது.