'தேர்தல்ல இதெல்லாம் சகஜம் தானே...' விஜயை மறைமுகமாக விமர்சித்த கடம்பூர் ராஜூ

'தேர்தல்ல இதெல்லாம் சகஜம் தானே...' விஜயை மறைமுகமாக விமர்சித்த கடம்பூர் ராஜூ

எந்த ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் தலைவரும் நான் தான் முதலமைச்சர் என்று சொல்லிக் கொள்வது தேர்தல் திருவிழாவில் சகஜமானது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (நவ.12) அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ. ராஜூ 'SIR' பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.

இதையடுத்து கடம்பூர் ராஜூ பேசுகையில், ''தேர்தலுக்கு முன்பாக சிலர், நான் முதலமைச்சர், நீ முதலமைச்சர் என்று ஆருடம் கூறுவார்கள். அது இயற்கை. எந்த ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் தலைவரும் நான் தான் முதலமைச்சர் என்று சொல்வார்கள். 10 சதவீதத்திற்கு கீழ் வாக்கு வங்கி உள்ளவர்கள் கூட முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவார்கள், தேர்தல் திருவிழாவில் இதெல்லாம் சகஜம்.

50 ஆண்டு கால அதிமுக வரலாற்றில் 34 ஆண்டுகள் முதல்வர்கள் இருந்த இயக்கம் நமது இயக்கம். 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்று 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி முதன் முதலில் பிரச்சாரத்தை தொடங்கியது அதிமுக தான். மக்கள் மற்றும் தொண்டர்களை மட்டுமே நம்பி தேர்தல் களத்திற்கு வந்துள்ள இயக்கம் அதிமுக. 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்பது அதிமுகவின் முழக்கமல்ல, மக்களின் முழக்கமாக மாறி உள்ளது.

'SIR' என்ற வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்பது புதிது கிடையாது. ஆனால் மத்திய அரசு சதி செய்வது போல திமுக ஒரு மாயையை ஏற்படுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. ஆனால் 'SIR' கள பணியில் திமுக தான் அதிகம் ஈடுபட்டு வருகிறது. இதிலிருந்து அவர்களுடைய இரட்டை நிலைப்பாடு தெரிகிறது.

எனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கயத்தார் பகுதியில் ஒருவர் இறந்து 5 ஆண்டு ஆகிவிட்டது. அவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய மனு கொடுத்த போதிலும் தற்போது வரை அவரை நீக்கம் செய்யவில்லை. இது போன்ற குழப்பங்களை நீக்குவதற்கு தான் இந்த SIR.'' என்றார்.