தமிழ்நாட்டில் மதவெறி அரசியலை பரப்ப நினைக்கிறது பாஜக: டி.ராஜா குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் மதவெறி அரசியலை பரப்ப நினைக்கிறது பாஜக:  டி.ராஜா குற்றச்சாட்டு

பாஜகவும், ஆர்எஸ்எஸும் மதவெறி அரசியலை தமிழகத்தில் தீவிரமாக பரப்பவும், பின்பற்றவும் விரும்புகிறார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

தென்னை மற்றும் பனைமரம் ஏறும் தொழிலாளர்களுக்கான மாபெரும் மருத்துவ முகாம், வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது . இதில், அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, டி.ராஜாசெய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த டி. ராஜா, “சென்னை வருவது பற்றி அமித்ஷா என்னிடம் சொல்லவில்லை. பாஜகவும், ஆர்எஸ்எஸும் மதவெறி அரசியலை தமிழகத்தில் தீவிரமாக பின்பற்ற விரும்புகிறார்கள். திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை பிரச்சனையாக்குவது, மக்களை பிரிவினைப்படுத்துவது, ஒரு மதத்தை மற்றொரு மதத்திற்கு எதிராக நிறுத்துவது, மோதலை தூண்டுவது ஆகியவைதான் பாஜக - ஆர்எஸ்எஸ் எடுக்கும் முயற்சி.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டு, நாடாளுமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதி சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், தமிழ்நாட்டு மக்கள் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை உறுதியோடு காப்பாற்ற வேண்டும். மதத்தின் பேரால் அரசியல் செய்ய முயற்சிப்பவர்களை முறியடிப்பதற்கும், தேர்தலில் சரியான பாடம் புகட்டவும் தமிழ்நாட்டு மக்கள் களம் இறங்க வேண்டும்.

திமுக தலைமையில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து ஓரணியாகதிரள வேண்டும். மதவெறி சக்திகள் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட வேண்டும்” என டி. ராஜா கூறினார்.

தொடர்ந்து, கூலி தொழிலாளர்கள் மீது போலி ஜிஎஸ்டி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஜிஎஸ்டி குறித்து பல சர்ச்சைகள் உள்ளன. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, ஜிஎஸ்டி சட்டத்திற்கு எதிராக கருத்தை முன்வைத்தேன். பெரும் பிரச்சனையாக நீடிக்கும் ஜிஎஸ்டி விவகாரத்தை நிர்மலா சீதாராமன் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஜிஎஸ்டியால் ஏழை எளிய மக்கள், கூலித் தொழிலாளர்கள் பாதிக்கக்கூடாது” என்றார்.

மேலும், 2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய் வருகை தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு, “2026 தேர்தலில் திமுக தலைமையில் உள்ள கூட்டணி மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. திமுக கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி பங்கீடு, மற்ற பிரச்சினைகள் எதுவும் திமுக அணியின் முன்னால் வராது. அனைத்தும் சுமூகமாக நடைபெறும். மதவெறி அரசியலை முறியடித்து ஜனநாயகத்தை காப்பாற்றுவதுதான் எங்கள் நோக்கம்” என்றார்.