தவெக பொதுக்கூட்டத்தில் நடந்தது விபத்து: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கருத்து

கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒரு விபத்து. இதற்கு சிபிஐ விசாரணை கோருவது அர்த்தமற்றது என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
ஆரணியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரூரில் தவெக பொதுக்கூட்டத்தில் 10 ஆயிரம் பேர் கூடவேண்டிய இடத்தில் 30 ஆயிரம் பேர் கூடியதால் 41 பேர் உயிரிழந்த அசம்பாவிதம் நடந்தது. இதற்கு விஜய்யின் காலதாமதமும் ஒரு காரணம். திரண்டிருந்த மக்கள் 6 மணி நேரம் தண்ணீர்கூட இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அப்போது, விஜய்யின் வாகனம் உள்ளே வந்ததால் நெரிசல் அதிகமாகி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவம் இனி நிகழக்கூடாது. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோருவதற்கு அர்த்தமே இல்லை. இதனை யாரும் திட்டமிட்டு செய்யவில்லை. தற்செயலாக நடைபெற்றது. இனி வரும் காலங்களில் சாலையில் மக்களை சந்திக்காமல், மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்துமாறு கட்சிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.