கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக நிர்வாகி மதியழகனை 2 நாள் காவலில் எடுத்தது எஸ்ஐடி

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: தவெக நிர்வாகி மதியழகனை 2 நாள் காவலில் எடுத்தது எஸ்ஐடி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, கரூர் மேற்கு மாவட்ட தவெக பொதுச் செயலாளர் மதியழகனை 2 நாள் காவலில் எடுத்தது சிறப்புப் புலனாய்வுக் குழு.

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யபட்டது. தொடர்ந்து மதியழகன் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு கரூர் ஜேஎம் 1 நீதிமன்றத்தில் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது. இந்த வழக்கு இன்று நீதிபதி பரத்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தவெக தரப்பில் ஏற்கெனவே போலீஸார் விசாரணை நடத்திவிட்டனர். அதனால் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த எஸ்ஐடி விசாரணையே தேவையில்லை என்று தவெக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மதியழகனிடம் உள்ளூர் போலீஸ் தான் விசாரித்தனர். அதனால் நாங்கள் விசாரிக்க வேண்டும். ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும்.” என வாதிடப்பட்டது.

அதற்கு நீதிபதி, “உச்ச நீதிமன்ற விசாரணை நாளை தான் நடைபெறவுள்ளது. அதனால் 2 நாட்கள் மட்டும் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.” என்றார்.

மேலும், விசாரணையை முடித்து வரும் சனிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் மதியழகனை நீதிமன்றத்தில் அஜர்படுத்தும்படி உத்தரவிட்டார். இதனையடுத்து மதியழகனை, சிறப்பு புலனாய்வுக் குழுவினர், கரூர் சுற்றுலா மாளிகைக்கு அழைத்துச் சென்றனர்.