ஆசியாவிலேயே இதுதான் முதல்முறை! டெல்லி மருத்துவர்கள் சாதனை

ஆசியாவிலேயே இதுதான் முதல்முறை! டெல்லி மருத்துவர்கள் சாதனை

ஒருவர் உயிரிழந்த பிறகு இரத்த ஓட்டத்தை மீண்டும் தொடங்கி, அவரது உடல் உறுப்புகளை தானமாக எடுத்து டெல்லி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கீதா சாவ்லா என்ற 55 வயது பெண்மணி பக்கவாதத்தால் அவதியடைந்து வந்தார். மருத்துவர்கள் அவருக்கு மோட்டார் நியூரான் நோய் இருப்பதாக (Motor Neuron Disease) கண்டறிந்தனர். இந்நிலையில் அவர் கடந்த வாரம் முதல் கடுமையான சுவாச பிரச்சனையால் அவதியடைந்த நிலையில் நவம்பர் 5 ஆம் தேதி டெல்லி துவாரகா பகுதியில் உள்ள HCMCT மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நவம்பர் 6 ஆம் தேதி இரவு 8.43 மணிக்கு அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், கீதா சாவ்லாவின் விருப்பப்படி அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். தொடர்ந்து அவரது இதயம் செயலிழந்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு எக்ஸ்ட்ரா கார்போரியல் மெம்பிரேன் ஆக்சிஜனேட்டரை (ECMO) பயன்படுத்தி நார்மதர்மிக் ரீஜினல் பெர்ஃபியூஷன் (NRP) எனப்படும் அரிய மருத்துவ முறைபடி அவரது வயிற்று பகுதியில் இரத்த ஓட்டத்தை மருத்துவர்கள் மீண்டும் தொடங்கினர்.

இவ்வாறு செய்வதால் அவரது வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளை செயலிழக்கவிடாமல் செய்து அவற்றை பாதுகாப்பாக எடுத்து தானம் செய்ய முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

"ஒருவர் உயிரிழந்த பின்பும் மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் அவரது உடலில் இரத்த ஓட்டத்தை தொடங்கி, உறுப்பு தானத்துக்காக அவற்றை செயலாற்றலுடன் இருக்க வைக்கும் இந்த முயற்சி ஆசியாவிலேயே இப்போதுதான் முதல்முறையாக நடைபெற்றுள்ளது. இந்த முயற்சியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்" என்று மணிப்பால் மருத்துவமனையின் தலைவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் பெருமிதத்துடன் கூறினார்.

பொதுவாக, இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் துடித்துக் கொண்டிருக்கும் வரைதான் அவரது உறுப்புகள் தானத்திற்காக பெறப்படுகின்றன. ஆனால், மூளைச்சாவுக்கு பின் உடலின் இரத்த ஓட்டம் நின்றுவிட்டால் ஒருவரது இதயம் செயலிழந்துவிடும். இதனால் காலம் கருதி உறுப்புகளை தானமாக எடுக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் Normothermic Regional Perfusion (NRP) முறைப்படி கல்லீரல், சிறுநீரகங்களை நீண்ட நேரம் செயழிக்காமல் பாதுகாப்பாக எடுத்து தானம் செய்ய முடியும்" என்றார்.

அனைத்து நடைமுறைகளுக்கு பின், கீதா சாவ்லாவின் கல்லீரல் 48 வயதுடைய ஆணுக்கும், அவரது சிறுநீரகங்கள் 63 மற்றும் 58 வயதுடைய இரண்டு ஆண்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளன. வழங்கப்பட்டன. மேலும், அவரது கண்களின் கார்னியா, தோல் என பல உறுப்புகள் பல்வேறு நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.