'டித்வா' புயல் எச்சரிக்கை: சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து

'டித்வா' புயல் எச்சரிக்கை: சென்னையில் 54 விமான சேவைகள் ரத்து

புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் விமானங்கள் என மொத்தம் 54 விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டித்வா' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இவை புதுவையில் இருந்து சுமார் 330 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் (நவ.29), நாளையும் (நவ.30) வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக நேற்று இரவு முதல் தென் தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இன்று வட தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையிலும் பரவலாக மழை பெய்து வருவதால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை விமானங்கள் என மொத்தம் 54 விமான சேவைகளை இண்டிகோ ஏர்லைன்ஸ் தனியார் நிறுவனம் ரத்து செய்துள்ளது. அதன்படி, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம், பெங்களூரு, ஹைதராபாத், இலங்கை யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு புறப்பாடு மற்றும் வருகை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புறப்பாடு விமானங்கள் ரத்து

புறப்பாடு விமானங்கள் வருகை விமானங்கள் நேரம்
சென்னை தூத்துக்குடி காலை 6.10
சென்னை மதுரை காலை 8.15
சென்னை திருச்சி காலை 9.10
சென்னை தூத்துக்குடி காலை 9.25
சென்னை மதுரை காலை 1.20
சென்னை தூத்துக்குடி காலை 11.50
சென்னை மதுரை பகல் 12.15

மேல் குறிப்பிட்டுள்ளபடி, சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 27 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வருகை விமானங்கள் ரத்து

புறப்பாடு விமானங்கள் வருகை விமானங்கள் நேரம்
தூத்துக்குடி சென்னை காலை 9.35
மதுரை சென்னை காலை 11.20
திருச்சி சென்னை காலை 11.45
தூத்துக்குடி சென்னை பகல் 1.00
மதுரை சென்னை பகல் 1.15
தூத்துக்குடி சென்னை மாலை 3.35
மதுரை சென்னை மாலை 5.40

மேலே குறிப்பிட்டுள்ள பட்டியல் படி, பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் 27 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த விமான சேவைகள் அனைத்தும் ஏடிஆர் எனப்படும் சிறிய ரக விமானங்கள். இந்த சிறிய ரக விமானங்கள் சூறைக்காற்று மற்றும் கனமழையின்போது வானில் பறப்பது மிக ஆபத்தானது என்பதால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்துள்ள விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு தகவலை கேட்டறிந்து பயணங்களை திட்டமிட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.