மூணாறு ஆகாய ஓட்டலில் இயந்திர கோளாறு - 120 அடி உயரத்தில் சிக்கி தவித்த 5 பேர் பத்திரமாக மீட்பு

மூணாறு ஆகாய ஓட்டலில் இயந்திர கோளாறு - 120 அடி உயரத்தில் சிக்கி தவித்த 5 பேர் பத்திரமாக மீட்பு

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள ஆனச்சால் பகுதியில் 'ஸ்கை டைனிங்' எனப்படும் ஆகாய ஓட்டலில் ஹைட்ராலிக் கிரேன் இயந்திர கோளாறால் 120 அடி உயரத்தில் சிக்கித் தவித்த 5 சுற்றுலா பயணிகள் 3 மணிநேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறில் உள்ள ஆனச்சால் பகுதியில் 'ஸ்கை டைனிங்' எனப்படும் ஆகாய ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலுக்கு உணவு அருந்த வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஹைட்ராலிக் கிரேன் இயந்திரம் மூலம் 120 அடி உயரத்தில் சுற்றுலாப் பயணிகளை ஆகாயத்தில் அமர வைத்து உணவு உண்ணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த ஓட்டலுக்கு இன்று மாலை உணவருந்த வந்த சுற்றுலாப் பயணிகள் 120 அடி உயரத்தில் உணவு அருந்தி கொண்டிருந்த போது ஹைட்ராலிக் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு உணவருந்த வந்தவர்கள் கீழே இறங்க முடியாமல் அந்தரத்தில் சிக்கித் தவித்தனர். இதை அடுத்து அந்தரத்தில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் 5 பேரை மீட்பதற்காக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் அந்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டலில் சிக்கித்தவித்த சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் 5 பேரை ஒரு வழியாக தீயணைப்புத்துறை ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் மங்களூரை சேர்ந்த முஹம்மது சஃப்வான் (31), அவரது மனைவி தௌபீனா (25) மற்றும் அவர்களுடைய குழந்தைகள் இவான் மற்றும் இனாரா ஆகியோருடன், 'ஸ்கை டைனிங்' எனப்படும் ஆகாய ஓட்டல் ஊழியர் ஹரிப்ரியா என்பதும் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக மூணாறு போலீசார் விரைந்து வந்து, தொங்கும் ஹோட்டல் நடத்துவதற்கான உரிமம் மற்றும் இயந்திர செயல்பாடு, ஆய்வு செய்யப்பட்ட நாள்? ஆகியவை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூணாறில் தொங்கும் ஹோட்டலில், ஹைட்ராலிக் கிரேன் இயந்திர கோளாறால் 120 அடி உயரத்தில் சிக்கித் தவித்த 5 சுற்றுலா பயணிகள் 3 மணி நேரப் போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.