7 மாவட்ட போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த முகமூடி கொள்ளையர்கள்... சிக்கியது எப்படி?
7 மாவட்ட காவல்துறைக்கு டிமிக்கு கொடுத்த வந்த 2 முகமூடி கொள்ளையர்களை கோவில்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிருஷ்ணாநகர் பகுதியில், கடந்த வாரம் ஆளில்லாத சில வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பீதியில் இருந்து வந்த அப்பகுதி மக்கள், கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் சான்ஸ் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணா நகர், இனாம் மணியாச்சி, சாலைப்புதூர், ஆலம்பட்டி விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்த 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது, முகமூடி அணிந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள்தான் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில், அந்த நபர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த சிவக்குமார்(28) மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சாந்தகுமார்(33) என்பது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, அவர்கள் இருவர் மீதும் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் திருட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளதும், திருட்டை அரங்கேற்றிவிட்டு அவர்கள் தலைமறைவாக இருந்து வந்ததும் தெரியவந்தது. அதில், சில திருட்டு வழக்குகள் தொடர்பாக போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வருவதும் விசாரணையில் அம்பலமானது.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், அவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அந்தவகையில் அவர்களது செல்போன் சிக்னலை வைத்து கைது செய்ய முயன்றபோது, சுதாரித்துக் கொண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்தும் வந்தனர்.
இந்த நிலையில், கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று போலீஸை கண்டதும், நிற்காமல் செல்ல முயன்றுள்ளது. அதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை மடக்கிப் பிடித்து உள்ளே பார்த்தபோது, பல்வேறு திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார், சாந்தகுமார் என்பது தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், இருவரும் கோவில்பட்டி அருகே ஒரு திருட்டு சம்பவத்தை அரங்கேற்ற வந்ததாக தெரிவித்துள்ளனர். அதனையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீடுகளை குறிவைத்து, முகமூடி அணிந்து கொண்டு திருட்டில் ஈடுபடுவதும், திருடியவுடன் காரில் தப்பிச் செல்வதையும் வாடிக்கையாக வைத்திருந்துள்ளனர். தற்போது, 7 மாவட்ட போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த வந்த முகமூடி கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ள சம்பவம், மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.