நானா திமுகவின் பி டீம்? கொடநாடு வழக்கில் ஏ1 இபிஎஸ்: கொதித்த செங்கோட்டையன்!

நானா திமுகவின் பி டீம்? கொடநாடு வழக்கில் ஏ1 இபிஎஸ்: கொதித்த செங்கோட்டையன்!

துரோகத்திற்கான நோபல் பரிசுக்கு இபிஎஸ் தகுதியானவர் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

செங்கோட்டையன் மற்றும் இபிஎஸ் இடையே கடந்த சில மாதங்களாக அதிகார மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமியை திமுகவின் பி டீம் என செங்கோட்டையன் முன்னிலையிலேயே டிடிவி தினகரன் விமர்சித்தார்.

இந்நிலையில் நேற்று அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக இன்று செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவுக்காக கடந்த 1972ஆம் ஆண்டு முதல் இரவு பாராமல் வேலை செய்து வருபவன் நான். 1975ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை சிறப்பாக நடத்திக்காட்டி எம்ஜிஆரிடம் பாராட்டு பெற்றோம். அதிமுகவுக்காக உழைப்பது மட்டுமே என் வாழ்நாள் லட்சியமாக கொண்டு இந்த இயக்கத்திற்கு உழைத்து வந்தேன்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும்:

அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது இரண்டு முறை எனக்கான வாய்ப்பு (முதல்வர் பதவி) வந்தது. ஆனால், இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அதை நான் ஏற்கவில்லை. 1972 முதல் அதிமுகவில் 53 ஆண்டு காலமாக இருந்து வருகிறேன். இந்த கட்சிக்கு இபிஎஸ் கூறுவதை போல துரோகம் செய்தவன் நானில்லை. என்னை திமுகவின் 'பி' டீம் என இபிஎஸ் விமர்சிக்கிறார். கொடநாடு கொலை வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்காத இபிஎஸ், என்னை பி டீம் என்கிறார். கொடநாடு வழக்கில் இபிஎஸ் தான் ஏ1. நான் யாருக்கும் எப்போதும் பி டீம் இல்லை. யார் பி டீம் என தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

எம்ஜிஆரிடம் அரசியல் கற்றவன்:

இபிஎஸ் தற்காலிக பொதுச்செயலாளர் மட்டுமே:

இபிஎஸ் தற்போது தற்காலிக பொதுச்செயலாளராக மட்டுமே இருந்து வருகிறார். பொதுச்செயலாளரை தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று விதி அதிமுகவில் உள்ளது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, அவர் என்னை எந்த அடிப்படையில் நீக்கினார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பேன்.

இபிஎஸ்ஸுக்கு நோபல் பரிசு:

துரோகத்தை பற்றி இபிஎஸ் பேச எந்த தகுதியும் இல்லை. துரோகத்திற்கான நோபல் பரிசு வழங்க வேண்டுமென்றால் அதை இபிஎஸ்-க்கு வழங்கும் அளவுக்கு துரோகத்தின் மொத்த உருவமாக இருந்து வருகிறார். அதிமுகவிற்காக அனைத்தையும் கொடுத்தவன் நான். என்னை குறை கூற இபிஎஸ்க்கு தகுதியில்லை. சசிகலாவிடம் இருந்து முதல்வர் பதவியை இபிஎஸ் எப்படி பெற்றார் என்பதை அனைவரும் அறிவார்கள். இபிஎஸ்-ஐ முதல்வராக்கியதற்கு அனைத்து உதவிகளையும் செய்தவன் நான், என்னையே அவர் நீக்கியுள்ளார். இது உண்மையாகவே வருத்தப்பட கூடிய நிகழ்வு. ஆனால், இதில் இருந்து நிச்சயம் மீண்டு வருவேன்" என்றார்.