தவெக கட்சி அல்ல, அது விஜயின் ரசிகர் மன்றம் - கார்த்தி சிதம்பரம் விமர்சனம்!

தவெக கட்சி நடிகர் விஜயின் ரசிகர் மன்றமாக மட்டுமே செயல்படுகிறதே தவிர, அரசியல் கட்சியாக செயல்படவில்லை என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சென்னை, கொருக்குப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் வடசென்னை கே.சௌந்தர்ராஜன் மற்றும் மருத்துவர் எஸ்.ஷியாம் சாகர் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கதிர்வீச்சு சோதனை, இசிஜி, எக்கோ என பல மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டதால் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கரூர் சம்பவம் குறித்து பேசுகையில், '' கரூரில் நடந்தது ஒரு துயர சம்பவம். இதுதொடர்பாக உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கு முன்பாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. குற்றம்சாட்டப்பட்டவர் வெளியில் இருந்தால், சாட்சியை களைப்பார் என்ற நிலை இருந்தால் மட்டுமே கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். '' என்றார்.
கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என குஷ்பு கூறியது குறித்த கேள்விக்கு, '' அதற்கான முறையான ஆதாரங்கள் அவரிடம் இருந்தால் அதனை நீதிமன்றத்திலோ, ஒரு நபர் ஆணையத்திலோ ஒப்படைக்கலாம். அதை விட்டு விட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்வது ஏற்புடையது அல்ல. இந்த சம்பவத்திற்கு யார் பொறுப்பு? என்று தான் பார்க்க வேண்டும். தவெக கட்சியின் பிரச்சார கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வருவார்கள் என அந்த கட்சியினர் கூறிய தகவல் என்ன? அதற்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டதா? என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். கூறியதைவிட அதிக நபர்கள் வரும் போது காவல்துறை மீது எந்த குற்றமும் சாட்ட இயலாது. இதற்கான முழு பொறுப்பும் அந்த கட்சி நிர்வாகிகளையே சாரும்.
கரூர் துயர சம்பவத்தில் மாவட்ட நிர்வாகத்திற்கும் பொறுப்பு உள்ளது. அதே போல தவெகவிற்கும் பொறுப்பு உள்ளது. தவெக என்ற கட்சி நடிகர் விஜயின் ரசிகர் மன்றமாக மட்டுமே செயல்படுகிறது தவிர அரசியல் கட்சியாக அது செயல்படவில்லை.
அரசியல் கட்சியாக செயல்படும்போது அங்கு ஒரு கமாண்டன்ட் கட்டுப்பாடு இருக்கும். ஆனால் தவெகவில் அதுபோன்ற எந்த கட்டுபாடுகளும் இல்லை. தவெக இன்னும் ரசிகர் மன்றமாக மட்டும் தான் இருக்கிறது.'' என பேசினார்.