பாஜக அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! செங்கோட்டையன் குறித்து பேசியது என்ன?

பாஜக அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! செங்கோட்டையன் குறித்து பேசியது என்ன?

ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஒருசேர இருப்பது அதிமுகவுக்கு பின்னடைவு இல்லை, ஒருநாள் பரபரப்பு அவ்வளவுதான் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகிய மூன்று முக்கிய அரசியல் தலைவர்களும் நேற்று ஒரே காரில் வந்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது எதிர்பாராத வகையில் அங்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகிய இருவரும் வந்து அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவரும் சேர்ந்து பாஜக மாவட்ட அலுவலகத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை மேற்கொண்டனர்.

அந்த ஆலோசனையில் செங்கோட்டையனை அதிமுகவில் இணைக்கலாமா? அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்கலாமா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த திடீர் ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்புக்குப் பிற்கு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "திருமண விழாவிக்கு அழைப்பு விடுப்பதற்காக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தோம்" என்று கூறினார்.

தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகிய மூன்று பேரும் ஒரே காரில் வந்து முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது குறித்து கேட்டதற்கு, "ஏற்கெனவே இதற்கு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி பதிலளித்துவிட்டார். அவர்கள் ஒன்று சேர வந்தது, ஒரு நாள் பரபரப்பு செய்தி அவ்வளவு தான். இதனால், அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது.

இவர்கள் ஒன்று சேர்ந்துள்ளதால் தேர்தல் களத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் அதை பொருட்படுத்த தேவையில்லை. ஆனால் அந்த சம்பவம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நடந்ததால் வேண்டுமானால் இதை ஒரு பரபரப்பு செய்தியாக வைத்து கொள்ளலாம்" என்று உதயகுமார் கூறினார்.

முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை மாவட்ட பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.