பொங்கல் பண்டிகை: 4 மடங்கு விலை உயர்ந்த பூவன் வாழைத்தார்கள்

பொங்கல் பண்டிகை: 4 மடங்கு விலை உயர்ந்த பூவன் வாழைத்தார்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புஞ்சை புளியம்பட்டி வாரச் சந்தையில் பூவன் ரக வாழைத்தார்களின் விலை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில், நேற்று வாழைத்தார் ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சந்தையான புஞ்சை புளியம்பட்டி வாரச் சந்தை  கூடியது. இங்கு தமிழ்நாட்டின் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூவன், ரஸ்தாளி, தேன் வாழை, நேந்திரன் உள்ளிட்ட வாழைத்தார் ரகங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக, சந்தையில் வாழைத்தார்கள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையில் பூஜைக்காக பூவன் வாழை அதிகளவில் பயன்படுத்துவதால், அவற்றின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், வாரச் சந்தையான புதன்கிழமை 2000-க்கும் மேற்பட்ட வாழைத்தார்களை வியாபாரிகள் விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம் 18 கிலோ எடை கொண்ட பூவன் ரக வாழைத்தார் 200 ரூபாய்க்கு விற்ற நிலையில், வரத்துக் குறைவு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 மடங்கு விலை உயர்ந்திருந்தது.

அதன்படி, ஒரு வாழைத்தார் 1000 ரூபாய்க்கு விற்பனையானது. இருந்தாலும், தேவையை கிராமங்களில் கடை வைத்திருப்போர் வாழைத்தார்களை மொத்தமாகவும், பொதுமக்கள் பழங்களை சீப்பாகவும் வாங்கி சென்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், "நாமக்கல் மாவட்டம் மோகனூர், பரமத்தி, வேலூர், கொடுமுடி ஆகிய பகுதிகளில் விளையும் பூவன் ரக வாழைத்தார்களைக் கொள்முதல் செய்து, விற்பனைக்கு கொண்டு வருகின்றோம். ஒரு வாழைத்தாரானது 15 கிலோ முதல் 18 கிலோ வரை எடை கொண்டதாகவும், அதில் 140 பழங்கள் முதல் 160 பழங்கள் வரை இருக்கும். கடந்த வாரம் ரூ.200-க்கு விற்ற பூவன் ரக வாழைத்தார், தற்போது பொங்கல் பண்டிகையின் பூஜைக்குப் பூவம் பழம் அத்தியாவசியம் என்பதால், இந்த வாரம் ஆயிரம் ரூபாய்க்கு விற்றது" எனத் தெரிவித்தனர்.