குன்னூரில் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு

குன்னூரில் தொடரும் கன மழையால், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது. சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து பாதிப்பு தொடர்கிறது. குன்னூர் எடப்பள்ளி பகுதியில் 11 செ.மீ மழை பதிவானது.
உழவர் சந்தை அருகே உள்ள, மாடல் ஹவுஸ் பகுதியில் 3-வது முறையாக குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர்.
ஆனால் நகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து அடைப்புகளை மட்டும் தற்காலிகமாக சீரமைத்து செல்கின்றனர். எனவே அங்கு மறைக்கப்பட்டு கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகளை மறைத்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் எனவே இதனை சீரமைத்து தந்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றும் குடியிருப்பு வாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
உழவர் சந்தை செல்லும் சாலையில் சிறு பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதனால் தண்ணீர் அதிகமாக வெளியேறி குடியிருப்பு பகுதிக்கு செல்வதால் கால்வாயை சீர் செய்யாமல் பொதுமக்கள் செல்லக்கூடிய பிரதான சாலையை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்தனர். இதனால், அந்தப் பகுதிக்கும், உழவர் சந்தைக்கும் மக்கள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இந்த சாலை புதிதாக சமீபத்தில் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அட்டடி டால்பின் நோஸ், கரும்பாலம், கிளண்டேல் உள்பட 4 பகுதிகளில் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர்.
இதேபோல் குன்னூர் - கட்டப்பெட்டு சாலையில் வண்டிச்சோலை, கோடநாடு ஆகிய பகுதிகளில் சாறைகளில் பாறைகள் விழுந்தன. நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் உத்தரவின் பேரில் உதவி செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ் தலைமையிலான குழுவினர் பாறைகளை அகற்றினர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவில் வருமாறு: ஊட்டி 123, எடப்பள்ளி 113, பந்தலூர் 74,, கெத்தை 56, கோடநாடு 56, கோத்தகிரி 52, குந்தா 49, குந்தா 49, கிண்ணக்கொரை 41, பாலகொலா 39, கூடலூர் 6 மி.மீ., மழை பதிவானது.