சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்பி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.
திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர்கள் கோவி. செழியன், பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் உள்ளனர்.
ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலர் சந்தானம், கனவு தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோரும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கனிமொழி தலைமையில் குழு அமைக்கப்பட்ட நிலையில், 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. தற்போதும் அவரது தலைமையிலேயே குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
முனைவர் பட்டம் பெற்ற மூவர், பேராசிரியர், மருத்துவர், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, தொழில் முனைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் அனைத்து மண்டலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்து, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய டிகேஎஸ் இளங்கோவன், "தமிழகத்தின் வளர்ச்சி அடிப்படையில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். மக்களின் கருத்துக்கள், நிபுணர்கள் கருத்துக்கள் கேட்டறிந்து அவர்களுடைய கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். கடந்த காலங்களைப் போல திமுக தேர்தல் அறிக்கை கதாநாயகனாக இந்த தேர்தலில் நிச்சயம் இருக்கும். திமுக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை அடுத்த கட்டமாக இன்னும் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் தேர்தல் அறிக்கை அமையும்." என்று அவர் தெரிவித்தார்.