“அபத்தமான விஷயங்களுக்கு ஆதரவு தரவேண்டாம். இந்த விஷயம் என்னை தொந்தரவு செய்தது” என தனது டீப் ஃபேக் ஏஐ புகைப்படம் குறித்து நடிகை ஸ்ரீலீலா கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீலீலா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஏஐ-யால் உருவாக்கப்பட்ட அபத்தமான விஷயங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என ஒவ்வொரு சமூக வலைதள பயனர்களையும் கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன். தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதற்கான வித்தியாசம் இது. என்னை பொறுத்தவரை தொழில்நுட்ப வளர்ச்சி என்பது வாழ்க்கையை எளிமையாக மாற்ற வேண்டுமே தவிர, சிக்கலாக்க கூடாது.
கலையை வேலையாக தேர்ந்தெடுத்தாலும், அதில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஒருவருக்கு மகள், பேத்தி, தங்கை, தோழி, சக பணியாளராவார். நாங்கள் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன் மகிழ்ச்சியை பரப்பும் ஒரு துறையில் இருக்க விரும்புகிறோம்.
ஆன்லைனில் நடக்கும் பல விஷயங்களை என்னுடைய வேலை காரணமாக என்னால் கவனிக்க முடியவில்லை. அதை என்னுடைய கவனத்துக்கு கொண்டு வந்த நலம் விரும்பிகளுக்கு நன்றி. நான் எல்லா விஷயங்களையும் சந்தேகத்துடனே அணுகுவேன். ஆனால் இந்த விஷயம் என்னை மிகவும் தொந்தரவு செய்ததுடன் வேதனைக்கு உள்ளாக்கியது.
இதுபோன்ற சூழலை கடந்து வந்த என் சகாக்களுக்காகவும் இதை பதிவு செய்கிறேன். கருணையும், கண்ணியமும் கொண்ட எனது ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுகிறேன். இனிமேல் அதிகாரிகள் இந்த விஷயத்தை கவனித்துக் கொள்வார்கள்” என தெரிவித்துள்ளார்.