திருத்தணி: ஊராட்சி நிர்வாகம் விநியோகித்த குடிநீரை அருந்திய இருவர் உயிரிழப்பு - பொதுமக்கள் போராட்டம்

திருத்தணி: ஊராட்சி நிர்வாகம் விநியோகித்த குடிநீரை அருந்திய இருவர் உயிரிழப்பு - பொதுமக்கள் போராட்டம்

ஊராட்சி நிர்வாகம் விநியோகித்த குடிநீரை பருகியதால் இருவர் உயிரிழந்ததாக கூறி, கர்லம்பாக்கம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கர்லம்பாக்கம் காலனியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேல்நிலை குடிநீர் தொட்டியின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே இந்த குடிநீரை அருந்திய அப்பகுதி மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் குடிநீர் அருந்தியதால் பாதிக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஏழுமலை, சுதா என்ற இருவர் சிகிச்சைப் பலனின்றி இறந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் உயிரிழப்புக்கு அசுத்தமான குடிநீர் தான் காரணம் எனக்கூறி ஆர்.கே. பேட்டை செல்லக்கூடிய மாநில நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களின் பிரச்சனைகள் குறித்து கேட்க மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பாதுகாப்புக்காக 30க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.