நூறு, பீரு, சோறு கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர் - யாரை குற்றம்சாட்டுகிறார் பிரேமலதா விஜயகாந்த்
தேர்தல் வந்தால் ஓட்டுக்கு காசு, அரசியல் தலைவர்கள் வந்தால் 200 ரூபாய் கொடுத்து லாரியில் அழைத்துச் செல்வது. இப்படி நூறு, பீரு, சோறு கொடுக்கப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பகிரங்கமாக குற்றச்சாட்டினார்.
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், உள்ளம் நாடி இல்லம் தேடி’ என்ற பேரில் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் நேற்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து பரப்புரையில் பேசிய பிரேமலதா, "ஈரோடு மாவட்ட மக்களுக்காக இலவசமாக வீடு கட்டுவதற்காக விஜயகாந்த் நிலம் வழங்கினார். ஆனால், இந்நிலத்தை தேமுதிகவில் இருந்து திமுகவிற்கு மாறிய எம்எல்ஏ ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டார். இதனை எதிர்த்து தேமுதிக சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கைப்பற்றிய நிலத்தை தேமுதிகவிடம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, மக்களுக்கு அந்த இடத்தை இலவசமாக வழங்குவோம்” என்றார்.
தொடர்ந்து, “கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெறும் பிரச்சாரத்திற்கு ஒரு நபருக்கு ரூ.200,300 கொடுத்து பேருந்து, லாரிகளில் ஏற்றிச் சென்றதாக கூறினார்கள். தேர்தல் வந்தால் ஓட்டுற்கு காசு, அரசியல் தலைவர்கள் வந்தால் ரூ.200 கொடுத்து லாரியில் அழைத்துச் செல்வது. இப்படி, நூறு, பீரு, சோறு கொடுத்து தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் டாஸ்மாக், போதை. மக்கள் யோசிக்கவே கூடாது, கேள்வியே கேட்க கூடாது என்று முடிவு செய்துவிட்டார்கள். எனவே, மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்” என்றார்.
மேலும், ”எஸ்ஐஆர் பணி நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் தங்களது வாக்குகளை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களுக்கு ஓட்டு வாங்கி கொடுத்து, நமது ஓட்டுகளை எடுப்பதாக புரளி உள்ளது. ஆனால், நமது வாக்குகளை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது. அப்படி ஏதாவது நடைபெற்றால் நிச்சயம் மக்கள் புரட்சி வெடிக்கும்" என்று பிரேமலதா எச்சரிக்கை விடுத்தார்.