“மொதல்ல கச்சத்தீவுன்னா என்னானு தெரியுமா?” - பொன் ராதாகிருஷ்ணனுக்கு துரைமுருகன் பதிலடி!

‘கச்சத்தீவு’ என்றால் என்ன என்று பொன் ராதாகிருஷ்ணனை சொல்ல சொல்லுங்கள், பிறகு அவரது கருத்துக்கு நான் பதிலளிக்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் குமணந்தாங்கல் பகுதியில், ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்’ நிகழ்ச்சி இன்று (அக்.8) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ஏற்கனவே, மகளிர் உரிமைத் தொகை பெற வேண்டி ஆயிரக்கணக்கில் மனுக்கள் உள்ளன. இருந்தாலும், மக்கள் தங்களது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, முகாம்களில் மனுக்களை வழங்கி வருகின்றனர். காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு கணிசமான நிதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பூமியை பாய் வானமே கூற என வாழுகின்ற மக்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அந்த மக்களுக்கு சொந்தமாக இடம் கொடுத்தால் குடிசையோ, கூரையோ அமைத்து வசிப்பார்கள். சொந்த வீட்டில் வசிக்கிறோம் என்ற நிம்மதி அனைவருக்கும் கிடைக்கும் வகையில், ‘வீடு கட்டும் திட்டத்தை’ ஏற்படுத்தியுள்ளோம். முகாம்களில் மனுக்கள் விடுபட்டிருந்தால், ஒவ்வொரு கிராமமாக நானே சென்று மக்களை சந்தித்து, அவர்களது மனுவை பெற்று குறைகளை தீர்ப்பேன்” என உறுதியளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் அரசுப் பள்ளி செயல்படும் போது ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ முகாம் நிகழ்ச்சி நடக்கிறதே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஒரு நாளில் மாணவர்களின் கல்வி ஒன்றும் பாதிக்காது” என்றார்.
தொடர்ந்து கரூர் சம்பவத்தை திசை திருப்ப முயற்சி என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்த கேள்விக்கு, “முதலில், கச்சத்தீவு என்றால் என்ன? என பொன் ராதாகிருஷ்ணனை சொல்லச் சொல்லுங்கள். அதன்பிறகு நான் பதிலளிக்கிறேன். வெறும் டைட்டில்களை வைத்து கேள்வி கேட்காதீர்கள்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பொதுமக்களை நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள், குடிநீர் வழங்கப்படவில்லை என அதிகாரிகளுடன் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி, உணவுகள் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில், பொதுமக்கள் தட்டுகளை கையில் ஏந்தியபடி காத்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.