திமுக ஆட்சியில் ரூ.8,119 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு - அமைச்சர் சேகர்பாபு

திமுக ஆட்சியில் ரூ.8,119 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்பு - அமைச்சர் சேகர்பாபு

 தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, 8,119 கோடி ரூபாய் மதிப்பிலான 8 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரன் திருக் கோயில் மகா கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ரூபாய் 13 கோடி மதிப்பீட்டில் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை பேசிய அமைச்சர் சேகர்பாபு, ”இந்த கோயில் 3000 ஆண்டுகள் பழமையானது என கூறுகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத்திற்கு இணைப்பாக இந்த கோயில் போற்றப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் உபயதார்கள் அதிகளவில் வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, 1,557 கோடி ரூபாய் உபயதாரர்கள் திருக்கோயில் நிதியுதவி திருப்பணிகளுக்காக வழங்கியுள்ளனர். இதன்மூலம் 12,017 திருக்கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் 8,119 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் பரப்பளவு சுமார் 8 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இருக்கும். கோயில் நிலம் மீட்பு இந்த திமுக அரசுடைய மற்றொரு சாதனை” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இன்று நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்வுகள் குறித்து பேசுகையில், “இன்று மட்டும் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 31 கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றன. இதுவரை இந்த திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 3,896 கோயில்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளன. ஜனவரி மாதத்தின் இதன் எண்ணிக்கை நாலாயிரத்தை கடந்து விடும், இதுவும் திமுக ஆட்சியின் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனை“ என அமைச்சர் சேகர் பாபு கூறினார்.