லேதம், ரவீந்திரா சதம் - நியூஸிலாந்து 417 ரன்கள் குவிப்பு
நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 231 ரன்களும், மேற்கு இந்தியத் தீவுகள் 167 ரன்களும் எடுத்தன. 64 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்தது. நேற்று 3-வது நாள் ஆட்டத்தை நியூஸிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது.
தனது 4-வது சதத்தை விளாசிய ரச்சின் ரவீந்திரா 185 பந்துகளில், ஒரு சிக்ஸர், 27 பவுண்டரிகளுடன் 176 ரன்கள் குவித்த நிலையில் ஓஜய் ஷீல்ட்ஸ் பந்தில் போல்டானார். 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் நியூஸிலாந்து அணி 95 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 417 ரன்கள் குவித்திருந்தது. வில் யங் 21, மைக்கேல் பிரேஸ்வெல் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 481 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நியூஸிலாந்து அணி கைவசம் 6 விக்கெட்கள் இருக்க இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.