''ஆட்சி அதிகாரத்தில் அமமுக பங்கு பெறும்'' - டி.டி.வி. தினகரன் நம்பிக்கை

''ஆட்சி அதிகாரத்தில் அமமுக பங்கு பெறும்'' - டி.டி.வி. தினகரன் நம்பிக்கை

தமிழ்நாட்டில் வரும் தேர்தலுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கு பெறும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தஞ்சையில், அக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் வரும் சட்டமன்றத்தேர்தலில் கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனுக்கு வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசு தொழில் முதலீடு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் விரிவான அறிக்கை வெளியிட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளன, போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக ஆக்கிய மத்திய அரசை வரவேற்றும், காந்தியின் பெயரை மாற்றுவதை மத்திய அரசு கைவிட வேண்டும், திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் மதத்தின் பெயரால் பிரிவினை ஏற்படுத்தக் கூடாது, தமிழக அரசு கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன்
பொதுக்குழு கூட்டத்தில் டிடிவி தினகரன்

இதன் பிறகு டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''தேர்தல் நேரத்தில் துரோகி யார்? எதிரி யார்? நண்பன் யார்? என்பதெல்லாம் தாண்டி தமிழ்நாட்டின் மக்களின் நலனும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நலனும் தான் முக்கியம். துரோகி யார்? எதிரி யார்? நண்பன் யார்? என, பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இது தேர்தல் நேரம். தமிழ்நாட்டின் நலனும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நலனும் தான் முக்கியம்.

இன்னும் ஒரு மாத காலம் நேரம் இருக்கிறது. கூட்டணி குறித்து தமிழகத்தின் நலன் கருதி நல்ல முடிவு எடுப்போம். இந்த முறை எந்த கூட்டணி வெற்றி பெற்றாலும் கூட்டணி ஆட்சி அமைக்கின்ற ஒரு சூழ்நிலை தான் உருவாகி இருக்கிறது. நாங்கள் இடம் பெறும் கூட்டணி தான் உறுதியாக வெற்றி பெறும். இந்த ஆட்சி முடிவுக்கு வரும் நேரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் கிட்டத்தட்ட இந்த பென்ஷன் ஆணையத்திற்கு அறிவித்ததை நிறைவேற்றவே 13,000 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவ்வளவு நிதியை எப்படி நிதி மேலாண்மை செய்யப் போகிறார்கள்? என்பது தெரியவில்லை.

அதே நேரத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் போராடிக் கொண்டு தான் உள்ளார்கள். இதெல்லாம் இந்த ஆட்சியாளர்கள் சரியாக செயல்படவில்லை என்றால் உறுதியாக அவர்களுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்பது தான் இது காட்டுகிறது.

இந்த மாதத்திற்குள்ளாக கூட்டணி குறித்து அறிவிப்பு வந்துவிடும். எதிரி என்று யாரையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை. துரோகி என்று, நண்பன் என்று யாரையும் பார்க்கவில்லை. அவசியமும் இல்லை. யாரிடமும் சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். கூட்டணி ஆட்சி தான் அமையும்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இடம் பெறும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறும்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதும், மக்களை ஏமாற்றுவதும் தான் திமுகவினரின் வாடிக்கை. இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்'' என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.