கலவரத்தை தூண்ட ஆர்எஸ்எஸ் முயற்சி - சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றத்தில் எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தலாம் என்று சிலர் முயன்று வருவதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை வட்டத்திற்கு உட்பட்ட கோட்டைக்கருங்குளம் பகுதியில் 22.96 அடி கொள்ளவு கொண்ட நம்பியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில், சபாநாயகர் அப்பாவு அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது, “நம்பியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக 40 குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று முதல் 117 நாட்களுக்கு தினமும் 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 1744 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்” என்றார்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் பொதுமக்கள், பக்தர்கள் அல்லாத 50 பேர் கொண்ட குழு சதி திட்டமிட்டு கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றனர். இதற்கு காரணம் இந்திய முழுவதும் கரசேவை என்று கூறி பாபர் மசூதியை இடித்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்ததாக பாஜகவினர் நினைக்கின்றனர். அந்த சம்பவத்தில் முன் நின்று கரசேவை செய்தவர்களுக்கு தற்போது கேஸ், பெட்ரோல் பங்க் ஏஜென்சி வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஒரு சூழலை உருவாக்கி பாஜக ஆட்சிக்கு வந்த முறையை இங்கும் கையாள முயல்கின்றனர்.
இந்த போராட்டத்தில் பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பிரச்சனை இல்லை. ஓட்டு வேண்டும் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்பினர் தூண்டிவிட்டு திருப்பரங்குன்றம் சம்பவம் நடக்கிறது. இதே திருப்பரங்குன்றம் விவகாரத்தில், 2014, 2017, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நீதிபதிகள் மூலம் வழங்கப்பட்ட நான்கு தீர்ப்பிற்கு முற்றிலும் மாறான தீர்ப்பை தற்போதைய நீதிபதி வழங்கியுள்ளார்.
பொறுப்பில் உள்ளவர்கள் நிதானம், பொறுமை, அமைதி, கடமை உணர்வாக செயல்பட்டு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ், சனாதன கொள்கை உள்ளவர்கள் கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அது தமிழ்நாட்டில் நடக்காது. இந்த விவகாரத்தில் நான்கு தீர்ப்புக்கு முரணான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இருந்து நல்ல தீர்ப்பு வரும்” என்றார்.
மேலும், இந்த விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், இந்துக்களுக்கு விரோதமாக திமுக அரசு இருப்பதாக கூறுகிறார்கள். இந்த ஆட்சியில்தான் 3,800 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் பணிகள் ரூ. 500 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது. இந்த அரசு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைவரும் விரும்பும் சமூக நீதிக் கொள்கையில் உள்ள ஆட்சி” என்றார்.