அமித் ஷாவை சந்தித்த எஸ்.பி.வேலுமணி... நடந்தது என்ன?
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடனான சந்திப்பை முடித்து விட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு நேற்று வருகை தந்தார். அதனை தொடர்ந்து நேற்று புதுக்கோட்டையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பிரச்சாரத்தில் பங்கேற்று அமித் ஷா உரையாற்றினார்.
பிரச்சாரம் முடிந்து நேற்றிரவு சாலை மார்க்கமாக திருச்சி வந்த அமித் ஷா கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். அப்போது, அவர் தலைமையில் பாஜக மையக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மன்னார்புரம் பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில் இன்று நடைபெற்ற 'மோடி பொங்கல் விழா'வில் அமித் ஷா பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன், எச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம், நடிகை கஸ்தூரி, கேசவ விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமித் ஷா சிறிது நேரம் இருந்து விட்டு உடனே புறப்பட்டு சென்றார். அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில் கூட அவர் உரையாற்றவில்லை. அங்கிருந்து புறப்பட்டு திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்றார்.
அங்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அமித் ஷா-வை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணியை இன்னும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த சந்திப்பில் அதிமுகவின் முன்னாள் எம்.பி ப.குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையத்துக்குச் சென்று டெல்லிக்கு புறப்பட்டார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழகம் வந்த மத்திய உள்துறை அமித் ஷா அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு சென்றிருப்பது அரசியல் களத்தில் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.