'தை பிறந்தால் வழி பிறக்கும்' கூட்டணி குறித்த கேள்விக்கு ஓபிஎஸ் பதில்
'தை பிறந்தால் வழி பிறக்கும்' என தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையானது மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாய்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது ராமநாதபுரம் மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக மன்னர் முத்துராமலிங்க சேதுபதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் அவை தோல்வியில் முடிந்துள்ளன.
ஒருவழியாக கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் முயற்சியால் முல்லைப் பெரியாறு அணையானது கட்டி முடிக்கப்பட்டு 1895ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக்கின் பிறந்தநாளை தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த ஆண்டு அவருடைய 185வது பிறந்தநாளானது தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வருகிற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவர் பேசுகையில், “ஐந்து மாவட்டங்களில் உள்ள மக்களின் நீர் ஆதாரமாக விளங்குகிற முல்லைப் பெரியாறு அணையை கட்டி தந்த கர்னல் ஜான் பென்னிகுயிக்கை போற்றும் விதமாக ஜெயலலிதா ஆட்சியில்தான் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக ஜெயலலிதா தான் தனது ஆட்சியில் போராடினார்” என்றார்.
அவரிடம் வரும் 2026 ஆம் தேர்தலில் யாருடன் கூட்டணி என கேள்வி எழுப்பியதற்கு, "தை பிறந்தநாள் வழி பிறக்கும். இன்று தான் தை பிறந்திருக்கிறது. இன்னும் 30 நாட்கள் இருக்கிறது. அதற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார். தொடர்ந்து, போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற கேட்டதற்கு, “அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கிற நிலையில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஓபிஎஸ் இன்னும் 30 நாட்களில் வழிபிறக்கும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.