டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கார் குண்டுவெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் நுழைவு வாயில் 1 அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இன்று மாலை 7 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. பயங்கர சப்தத்துடன் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பில் வெடித்துச் சிதறிய காருக்கு அருகில் இருந்த மேலும் 4 கார்களும் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை 8 பேர் இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்த 15 பேர் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஆனால், 8 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், ஒருவருக்கு லேசான காயத்துடன் சுயநினைவில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டை அருகே நிகழ்ந்த இந்த சம்பவத்தையடுத்து தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் விரைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, என்ஐஏ மற்றும் தேசிய பாதுகாப்பு படை குழுக்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.