தனுஷூடன் 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் நடித்த அபிநய் காலமானார்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அபிநய் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 48.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அபிநய் . அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு ஒரு கட்டத்தில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. இதனால், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பல திரைப்படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளார். நடிகர் விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படத்தில் வில்லனுக்கு இவர் தான் குரல் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு சினிமாவில் எந்த வாய்ப்பு கிடைக்காததால் வறுமையின் கோரப்படியில் இருந்துள்ளார். அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வந்ததாக அவரே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும் அவர் தனது திரைப்பயணத்தில் சரியான கதைகளை தேர்வு செய்யாததால் தொடர் தோல்விகளை சந்தித்ததாகவும், அதனாலேயே தற்போது வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அது மட்டுமின்றி அவரது அம்மாவின் இறப்பு அவரை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியது எனவும் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு நடிகர் அபிநய் வாழ்க்கையில் தொடர் போராட்டங்களைச் சந்தித்து வந்துள்ளார். தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு உடல் மெலிந்த நிலையில் போராடி வந்திருக்கிறார். அந்த சமயத்தில் கே.பி.ஒய். பாலா அவருக்கு உதவி புரியும் வகையில் நேரடியாகவே சென்று பணம் வழங்கினார். கடைசியாக அவர் கலந்து கொண்ட திரை நிகழ்ச்சி கே.பி.ஒய் பாலாவின் ஜாதி கண்ணாடி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவாகும்.
தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த அவர் தங்கியிருந்த வாடகை வீட்டிலேயே காலமானார். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், நடிகர் அபிநய் உடல் இன்று மாலை 4 மணிக்கு வடபழனியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் கேபி ஒய் பாலாவும் முன்னிருந்து நடத்தி வருகின்றனர்.