நிர்வாகியை கன்னத்தில் அறைந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ... நடந்தது என்ன?

நிர்வாகியை கன்னத்தில் அறைந்த கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ... நடந்தது என்ன?

ஒன்றிய திமுக அவைத் தலைவரை கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ கோவிந்தராஜன் ஆவேசமாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரத்தின் ஒன்றிய திமுக அவைத் தலைவராக இருந்து வருபவர் முனிவேல். அண்மையில், திமுக சார்பில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் திமுக நிர்வாகிகளை அழைக்காமல் முன்னாள் மாவட்ட செயலாளரான திமுக எம்எல்ஏவை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடத்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, கட்சி நிர்வாகிகளை அழைக்காமல் நிகழ்ச்சி நடத்துவது ஏன்? என ஒன்றிய அவைத் தலைவர் முனிவேல், ஒன்றிய செயலாளர் சக்திவேலிடம் கேட்டுள்ளார். அப்போது, இனி மேல் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்துவதாக சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது.

அப்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் கோவிந்த ராஜன் தான் கலந்து கொண்ட நிகழ்ச்சி தொடர்பாக ஒன்றிய செயலாளரிடம் முறையிட்ட அவை தலைவர் முனிவேலை கண்டித்துள்ளார். இந்த விவகாரத்தினால் கோபத்தில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன், அவைத் தலைவர் முனிவேலை பளாரென கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளார். அதனைக் கண்ட சக நிர்வாகிகள் இருவரையும் விலக்கி விட்டு, சமரசப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கோவிந்தராஜனின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், எம்எல்ஏவாக உள்ள அவர் கட்சி நிர்வாகியை ஆவேசமாக தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், உட்கட்சி மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி கட்சிக்குள் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.