''அடித்தளமே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றனர்'' - விஜயை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்

''அடித்தளமே இல்லாமல் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றனர்'' - விஜயை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்

அடித்தளமே இல்லாமல் சிலர் அரசியலுக்கு வர முயற்சிக்கின்றனர் என தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தவெக தலைவர் விஜயை மறைமுகமாக சாடியுள்ளார்.

திமுகவின் 75வது ஆண்டு நிறைவைடைந்ததையொட்டி இளைஞர் அணி சார்பில், “திமுக 75 அறிவு திருவிழா” என்ற கருத்தரங்கம் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய நிறைவுரை:

திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டு முடிந்து 76 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். அதனை ஒட்டி 2 நாட்கள் நிகழ்ச்சி காலத்தின் கட்டாயம் கருதி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை எங்கு வேண்டுமானாலும் நடத்தி இருக்கலாம். பலர் வள்ளுவர்கோட்டம் பக்கம் வர மாட்டார்கள். அதற்கு காரணம் உண்டு. அதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. 1973 ஆம் ஆண்டு கருணாநிதி அடிக்கல் நாட்டினார்.

கடந்த 1976 ஆம் ஆண்டு எமெர்ஜென்சி கொண்டு வந்து ஆட்சியை கலைத்துவிட்டனர். வள்ளுவர்கோட்டம் திறப்பு விழாவிற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியை அழைக்கவில்லை. 13 ஆண்டிற்கு பிறகு ஆட்சிக்கு வந்தபோது வள்ளுவர்கோட்டத்தில் தான் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பதவி ஏற்றார். திமுகவை யாராலும் அழிக்க முடியாது.

திமுக கொள்கை கூட்டம் என்பது தெரிந்ததால் தான் புதிது புதிதாக நம்மை அழிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பாசிச கூட்டம் நமது கொள்கை கூட்டத்தில் கைவைக்க பார்க்கிறார்கள். திமுக இளைஞரணியினர் கட்சி வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.

தமிழ் மொழி, இனம் காப்பாற்றப்பட வேண்டும். இது தான் திமுகவின் கொள்கை. இந்த கொள்கைக்கு யாரெல்லாம் எதிரியாக உள்ளார்களோ அவர்கள் திமுகவுக்கும் எதிரி தான். கொள்கை தான் திமுகவிற்கு அடித்தளம். இன்று அரசியலில் சிலர் அடித்தளம் இல்லாமலே வர முயற்சிக்கின்றனர்.

ஒவ்வொரு ஊரிலும் ஆண்டுக்கு கண்காட்சி அமைக்கப்படும். அதில் தாஜ்மஹால், ஈபிள் டவர் போன்ற மாதிரிகள் அமைக்கப்படும். அதை கண்டு புகைப்படம் எடுக்க இளைஞர் கூட்டம் அதிகமாக வரும். ஆனால் அது வெறும் அட்டையால் செய்யப்பட்டது. அதற்கு எந்த அஸ்திவாரமும் இருக்காது. சிறு காற்று அடித்தாலும் கீழே விழுந்து விடும்.

திமுக என்பது தியாகத்தாலும் போராட்டத்தாலும் உருவானது என்று அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன். எமர்ஜென்சியை பார்த்த இயக்கம் திமுக. நம்மை கொள்கை வழிநடத்தி சென்று கொண்டுள்ளது. எமர்ஜென்சி காலத்தில் அதிமுக தனது பெயரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என மாற்றிக்கொண்டது.

எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்னர் அவரது கட்சி கூட்டத்தில் அவரே ஒரு கட்சியின் கொடியை எடுத்துக்காட்டி பார்த்தீர்களா? பார்த்தீர்களா? என கூறினார். அவரின் நிலைமையை பார்க்க மிகவும் பரிதாபமாக உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை பயம் வழிநடத்திக் கொண்டு செல்கிறது.

நாம் அறிவுத் திருவிழாவை நடத்தியுள்ளோம். அதிமுக அடிமை திருவிழா வேண்டுமானால் நடத்த முடியும். கடைந்து எடுத்த அடிமை என்று ஒருவரை சொல்ல வேண்டுமென்றால் அது எடப்பாடி பழனிசாமியை சொல்லலாம். அதிமுக என்ற போர்வையை போற்றிக் கொண்டு பாசிச பாஜக தமிழ்நாட்டில் ஊடுருவப் பார்க்கிறது.

தமிழ்நாட்டில் SIR மூலம் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை நீக்க முயற்சிக்கிறார்கள். திமுக இளைஞரணியினர் SIR முடியும் வரை விழிப்புடன் பணியாற்ற வேண்டும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி அடைய வேண்டும்.

ஏழாவது முறையாக திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும். திமுக இளைஞரணியின் பங்கை நிச்சயம் நாம் கொடுக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் தொடர்ந்து, பாடுபட வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.