சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து! பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்!!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து! பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்!!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசு பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

சிவகாசி அருகே அனுப்பன்குளம் பகுதியில் கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை உள்ளது. இந்த பட்டாசு கடையில் இன்று காலை வழக்கம் போல் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடையில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதற தொடங்கியது. இதனால் அருகில் இருந்த குடோனிலும் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் மூன்று வாகனங்களில் விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த வெடி விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பட்டாசு பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. இதன் காரணமாக சிவகாசி, சாத்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் செல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 3000 பட்டாசு கடைகள் உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தற்போது பட்டாசு வியாபாரம் சூடு பிடித்துள்ளது. அனைத்து பட்டாசு கடைகளிலும் பட்டாசு வரத்து அதிகளவில் உள்ளது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வார இறுதி நாள் என்பதால் பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். இந்நிலையில் இது போன்ற தீ விபத்துக்கள் பட்டாசு கடை விற்பனையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாசு கடை விபத்துகள் நடைபெறாமல் இருக்க அதிகாரிகளின் ஆய்வு முறையாக நடைபெற வேண்டும் என்றும், பட்டாசு விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பட்டாசு விற்பனையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டதற்கு காரணம் மின் கசிவா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.