வால்பாறையில் ஒற்றை காட்டு யானை வீடு புகுந்து தாக்கியதில் பாட்டி, பேத்தி உயிரிழப்பு

வால்பாறை அருகே வீட்டின் கதவை உடைத்து உட்புகுந்த காட்டு யானை தாக்கியதில் மூதாட்டியும் அவரது பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் உயிர் பயத்துடனே வாழும் நிலை நீடித்து வருகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் காட்டு யானை கூட்டங்களை விரட்டவும், யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்கவும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருப்பினும், வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள், அவ்வப்போது மக்கள் வசிக்கும் இடங்களில் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவது, ரேஷன் கடைகளை உடைத்து அரிசி உண்பது, மனிதர்களை தாக்குவது, விவசாய நிலங்களை சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் அவ்வபோது நடைபெற்று வருகின்றன.
இதில் மற்றொரு துயர சம்பவமாக இன்று அதிகாலை வால்பாறையில் யானை தாக்கியதில் மூதாட்டியும், அவரது பேத்தியும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை அருகே வாட்டர் பால் ஊமையாண்டி முடக்கு குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் புகுந்த ஒற்றை காட்டு யானை, அங்குள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது. அங்கு உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி அசாலா (55), அவரது மூன்றரை வயது பேத்தி ஹேமா ஸ்ரீ ஆகியோரை பலமாக தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை விரட்டும் பணியில் னத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டின் கதவை உடைத்து யானை தாக்கியதில் பாட்டி, பேத்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மகக்ளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வனத்துறையின் முதற்கட்ட விசாரணையில், இந்த தாக்குதலில் ஈடுபட்ட யானை டென்சி என்பதும், இது கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்டர்ஃபால் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜெர்மனி நாட்டு நபரையும் இன்த யானை தாக்கி கொன்றதும் தெரியவந்தது.
இதனிடையே, "வால்பாறை பகுதியில் அட்டகாசம் செய்யும் ஒற்றை காட்டு யானை டென்சி பிடித்து வேறு இடத்தில் விடுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்" என்று பொள்ளாச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி கூறியுள்ளார்.
முன்னதாக, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து சின்னத்தம்பி, அரிசி ராஜா, நரசிம்மன் ஆகிய 3 கும்கி யானைகளை வனத்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.