3 நாளில் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி... தெரு நாய்கடியால் அச்சத்தில் பொதுமக்கள்!

3 நாளில் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி... தெரு நாய்கடியால் அச்சத்தில் பொதுமக்கள்!

கடையநல்லூரில் கடந்த 3 நாட்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்டவர்கள் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகர் பகுதியில் தெரு நாய் தொல்லைகள் அதிகம் இருப்பதாக கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்கள் புகார் அளித்து வருகின்றனர். இரவு நேரம் மட்டுமில்லாமல், பகலிலும் பல்வேறு இடங்களில் கூட்டம் கூடமாக சுற்றித் திரியும் தெரு நாய்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி துரத்தி கடிப்பது தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில், கடையநல்லூர் நகரப் பகுதியில் கடந்த 3 நாட்களில் மட்டும் மாணவர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என 30-க்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதில், இன்று (அக்.10) ஒரு நாளில் மட்டும் 11 பேரை கடித்துள்ளது. நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், லேசான காயம் ஏற்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால், அப்பகுதி மக்கள் பகல் நேரத்திலும் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாகியுள்ளது. நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையில், சாலையில் நடந்துச் சென்ற நபரை தெரு நாய் ஒன்று விரட்டி கடித்து, அவரது ஆடையை கிழித்த சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இன்று தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி குட்டியப்பா நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இதேபோல், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாது நிலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி மாவட்ட நிர்வாகம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.