குறையாத தேங்காய் விலை... இல்லத்தரசிகள் கவலை
தேங்காய் விலை அதிகரித்து பல மாதங்களாகியும் குறையாதது இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
5 மாதங்களுக்கு முன்பு வரத்து குறைந்ததாலும், போதிய விளைச்சல் இல்லாததாலும் தேங்காய் விலை கிலோ ரூ.100-க்கும் மேல் அதிகரித்தது. இதனால் வாரத்திற்கு 3 தேங்காய்கள் வரை சமையலுக்கு வாங்கி வந்த இல்லதரிசகள், 1ஆக குறைத்துக் கொண்டனர்.
சட்னி, சாம்பார் போன்றவற்றுக்கு தேங்காயை அதிகம் பயன்படுத்தாமல் குறைத்து சமாளித்து வந்தனர். விலை குறைந்து நிலைமை சரியாகும் என அவர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால் இன்னும் தேங்காய் விலை குறையவில்லை. சென்னையில் மொத்த விலையில் 1 கிலோ தேங்காய் ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது. சில்லரை விலையில் 1 கிலோ ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் இல்லத்தரசிகள் மிகவும் கவலையில் உள்ளனர். தேங்காய் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.