”வடிவேலு, நயன்தாரா வந்தால் கூட தான் கூட்டம் கூடும்” - விஜயை விமர்சித்த செல்லூர் ராஜூ
நடிகர் வடிவேலு, நடிகை நயன்தாரா வந்தால் கூட கூட்டம் வரத்தான் செய்யும். ஓவர் கான்ஃபிடன்ஸ் வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விஜயை விமர்சித்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழமாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் செலவில் சுற்றுச்சுவர், மேற்கூரை அமைக்கவுள்ள பணிக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்று முதலமைச்சர் சொல்லக்கூடாது, சாமானிய மக்கள் சொல்ல வேண்டும். இந்த ஆட்சியில் தான் 5 வயது குழந்தைகள் முதல் 85 பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்.
என்னுடைய சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் மூர்த்தி டிபன் பாக்ஸ் கொடுக்கிறார். நலத்திட்டம் என்ற பெயரில் பலவற்றை செய்து வருகிறார். என்னுடைய சட்டமன்றத் தொகுதி நிதியிலிருந்து என்னால் கூட எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர முடியாத அளவிற்கு பல்வேறு பிரச்சனையைத் தருகிறார். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள்.
முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தை கூட இதுவரை செயல்படுத்தவில்லை. திமுக ஆட்சியில் மகளிர் மாநாடு என்ற பெயரில், பெண்களுக்கு எல்லாம் ரூ.500 கொடுத்துக் கூட்டத்தை கூட்டுவார்கள். அதில் எந்த ஒரு பயனும் இல்லை” என விமர்சித்தார்.
திமுக - தவெக இடையேதான் போட்டி, அதிமுக களத்தில் இல்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நேற்று வந்த விஜய்க்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. நாங்கள் களத்தில் இல்லை என்று சொல்பவர்கள் முட்டாள்தனமான சொல். விஜய் வருகிறார் என்பதால் கூட்டம் கூடுகிறது. ஒரு நடிகர் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும். விஜயை காட்டிலும் நடிகர் வடிவேலு, நடிகை நயன்தாராவை அழைத்து பிரச்சாரம் செய்தால் கூட்டம் கூடத் தான் செய்யும்.
மலேசியாவில் பேசிய விஜய், நான் சினிமாவில் தொடர வேண்டுமா? வேண்டாமா? என்று மக்களிடம் கேட்காமல் ரசிகர்களிடம் கேட்கிறார். எல்லாரும் எம்.ஜி.ஆர் ஆக மாற முடியாது. வானத்தில் ஒரு சந்திரன், பூமியில் ஒரு ராமச்சந்திரன் தான். எம்ஜிஆர் போல ஆக வேண்டும் என்றால் நினச்சா நடக்காது. ஏன் நம்ம டி.ஆர், பாக்கியராஜ், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் எல்லாம் கூட்டத்தை பார்த்துதான் கட்சி ஆரம்பித்தார்கள். ஆனால் என்ன ஆனது?
கமல்ஹாசன் ஊழலை எதிர்ப்போம் என பலமுறை தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் ஒரு சீட்டுக்காகப் போய்விட்டார். அதுபோன்று விஜய்யும் போய் விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர் கூட எடுத்தவுடனே வெல்லவில்லை. கட்சிக்காக ரத்தம் சிந்தி தான் வந்தார். எப்போதும் ஓவர் கான்ஃபிடன்ஸ் வைக்கக் கூடாது. விஜய் நாவை அடக்கிப் பேச வேண்டும்” என்று தெரிவித்தார்.