“எங்களை புரிந்து கொள்ளுங்கள்” - திமுக - அதிமுகவுக்கு பிரேமலதா கோரிக்கை
எங்களுக்குரிய மரியாதையையும் இடங்களையும் யார் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி. கேட்பது எங்கள் உரிமை. தர வேண்டியது உங்கள் கடமை. இதனை திமுக-வும் அதிமுக -வும் புரிந்து கொள்ள வேண்டும்”என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடந்த உள்ளம் தேடி இல்லம் நாடி பிரச்சாரத்தில் மேலும் அவர் பேசியதாவது: கடலூர் மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை தொண்டர்களுக்கு பரிசளிக்கிறேன். ஏனென்றால், நூறு, சோறு, பீரு கொடுத்தால் தான் வீட்டை விட்டுப் புறப்படுவார்கள். ஆனால், தேமுதிக தொண்டர்கள் சொந்தமாக வாகனம் பிடித்து, உணவு எடுத்துக் கொண்டு வந்து குவிந்தனர். இதுதான் தேமுதிக-வின் வரலாறு. இது விஜயகாந்த்துக்கு கிடைத்த வெற்றி.
திமுக, அதிமுக ஆட்சியில் அமர்வதற்கு நாங்கள் உழைக்கிறோம். எங்களுக்குரிய மரியாதையையும் இடங்களையும் யார் தருகிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி. கேட்பது எங்கள் உரிமை. தர வேண்டியது உங்கள் கடமை. இதனை, திமுக-வும் அதிமுக-வும் புரிந்து கொள்ள வேண்டும். 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 41 இடங்கள் கொடுத்தனர். அதில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
அப்போது வெற்றிபெற்றவர்களில் போனவர்கள் போகட்டும், அதைப்பற்றி கவலையில்லை. ஆனால், இன்று வரை தேமுதிக-வும், விஜயகாந்த்தும் தான் உயிர்மூச்சு என்றிருக்கும் மீதமுள்ளவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். கடைக்கோடி தொண்டர்களையும் அரசு பதவியில் அமர வைப்போம். 2026 தேர்தல் தேமுதிக தொண்டர்களுக்கான தேர்தல்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் வரும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தொண்டர்களை அரசுப் பதவிகளில் அமர வைப்பேன். விஜயகாந்த் இருந்தவரை நான் உங்களுக்கு அண்ணி. இனிமேல் நான் உங்களுக்கெல்லாம் அம்மா. உங்களுக்கு தாயாக இருந்து, உங்கள்அனைவரையும் கரைசேர்க்க வேண்டியதுவிஜயகாந்த் என்னிடம் கொடுத்துச் சென்ற கடமையாகும். அந்த கடமையை நிச்சயம் நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.