குப்பை கொட்டும் இடத்தில் கட்டுக்கட்டாக பணம்; 'ஷாக்'கான தூய்மைப் பணியாளர்
குப்பை கொட்டும் இடத்தில் கட்டுக்கட்டாக 500 மற்றும் 2,000 ரூபாய் தாள்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த தூய்மைப் பணியாளர் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
சென்னை வேளச்சேரி, நேரு நகர், அண்ணா தெருவில் பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர். அந்த இடத்தில் தூய்மைப் பணியாளர் குப்பைகளை சேகரிக்க வந்து உள்ளார். அப்போது அங்கு 2 பைகள் கிடந்தன. தூய்மைப் பணியாளர் அந்த பையை திறந்து பார்த்த போது, அதில் 2,000 ரூபாய் தாள்களும், 500 ரூபாய் தாள்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனே அந்த தூய்மைப் பணியாளர் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து வேளச்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு இருந்த 2 பைகளையும் போலீசார் காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். பின்னர் இரண்டு பைகளில் இருந்த பணம் நல்ல நோட்டா? அல்லது கள்ள நோட்டா? யார் வீசிச் சென்றது? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் குப்பையில் வீசப்பட்டிருந்த பணம் சினிமா ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தப்படும் டம்மி கரன்சி நோட்டுகள் என தெரிய வந்தது. இதையடுத்து இந்த பணத்தை குப்பையில் வீசி சென்றது யார்? அவர் வேண்டாம் என்று வீசி சென்றாரா? செல்லாத நோட்டுகள் என தெரிந்து பின்னர் விட்டு சென்றாரா? அல்லது திருடி கொண்டு வரப்பட்டதா? ஆகிய கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், டம்மி கரன்சி பையை வீசி சென்றவர்களை அடையாளம் காண அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், குப்பை சேகரிக்கும் போது கட்டுக்கட்டாக கிடந்த பணக்கட்டுகள் நிஜமான பணக்கட்டுகள் இல்லை என்று தெரியாத போதும், அதை கண்டதும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்த தூய்மைப் பணியாளரை போலீசார் பாராட்டினர். மேலும், எப்போதும் பரபரப்பாக காணப்படும் வேளச்சேரி நேரு நகர் பகுதியில் கட்டுக்கட்டாக டம்மி கரன்சி நோட்டுகள் வீசப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.