நாட்டாகுடி கிராமத்திற்கு கருணாஸ் திடீர் 'விசிட்' - ஊர் மக்களுக்கு காத்திருந்த 'சர்ப்ரைஸ்'

நாட்டாகுடி கிராமத்திற்கு கருணாஸ் திடீர் 'விசிட்' - ஊர் மக்களுக்கு காத்திருந்த 'சர்ப்ரைஸ்'

நாட்டாகுடி கிராமத்திற்கு திடீரென வந்த நடிகர் கருணாஸ், அந்த ஊர் மக்களை நேரில் சந்தித்து பேசினார்.

சிவகங்கை மாவட்டம் படமாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாட்டாகுடி கிராமம், அண்மையில் இந்தியா முழுவதும் மிகப்பெரும் பேசுபொருளானது. காரணம் இங்கு மக்கள் வாழ முடியவில்லை என குற்றஞ்சாட்டி ஊரைவிட்டு மொத்தமாக அனைவரும் வெளியேறினர். இதனால் கிராமம் முழுவதும் சூனியம் நிறைந்ததாக மாறியது. இதையடுத்து நாட்டாகுடி கிராமம் தமிழக முழுவதும் பேசுபொருளானது.

அதனால், சிவகங்கை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, சிசிடிவி கேமரா, குடிநீர் உள்ளிட்ட கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை உருவாக்கி தந்தது. இந்த நிலையில் விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலையில், தங்களது நிலங்கள் இல்லாததையும் அந்த மக்கள் சுட்டிக்காட்டினர்.

சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்போடு Mission IT-Rural என்ற அமைப்பை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திருசெல்வம், அங்குள்ள மக்களை ஒருங்கிணைத்து நில சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். அரசின் சார்பில் பாசன வாய்க்கால்கள் மற்றும் வரத்து கால்கள் சீரமைப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு தன்னார்வலர்களின் உதவியை பெற்று திருசெல்வம் அக்கிராமத்தை சீரமைக்கும் முயற்சியில் இறங்கினார்.

ஆனாலும், அந்த நிதி போதுமானதாக இல்லை என திருசெல்வம் குறிப்பிட்டு இருந்தார். அதையடுத்து, வெளியேறி சென்ற குடும்பங்கள் ஒவ்வொருவராக தற்போது திரும்பி வரத் தொடங்கியுள்ள நிலையில், விவசாய நிலங்களை சுற்றி வேலி அமைக்கும் பணிகளுக்கான நிதி ஆதாரங்களை திரட்டும் பணியில் திருசெல்வம் ஈடுபட்டு வந்தார். இதனை கேள்விப்பட்ட நடிகர் கார்த்தி தன்னுடைய ‘உழவன் பவுண்டேஷன்’ என்ற அமைப்பின் வாயிலாக சுமார் 500 அடிக்கு வேலி அமைத்துத் தந்துள்ளார்.

இது குறித்து திருசெல்வம் கூறுகையில், “நடிகர் கார்த்தி அமைத்து கொடுத்துள்ள 500 அடி வேலி உட்பட, தற்போது 3,500 அடிக்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இது கிராம மக்கள் மீண்டும் விவசாயத்தை துவங்குவதற்கு பெரும் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது. தொடர்ந்து விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்து வரும் நடிகர் கார்த்தி-க்கும், அவரின் உழவன் ஃபவுண்டேஷனுக்கும் கிராம மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இது போன்ற சூழலில், நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ், இன்று திடீரென நாட்டாகுடி கிராமத்திற்கு வருகை தந்தார். தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது நடிகர் கார்த்தியை செல்பேசி மூலம் தொடர்பு கொண்ட அவர், நாட்டாகுடி கிராம மக்களின் சார்பாக பேசினார். அப்போது “நீங்கள் கண்டிப்பாக ஊருக்கு வர வேண்டும்” என தெரிவித்த கிராம மக்கள் நடிகர் கார்த்தி-க்கு நன்றியை தெரிவித்தனர். நாட்டாகுடி மக்களின் நிலைமையை கேட்டறிந்த நடிகர் கருணாஸ் தன்னால் ஆன உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக அந்த மக்களிடம் உறுதியளித்தார்.