'காதல் கொண்டேன்' வெற்றிக்கு காரணம் இது தான்! நடிகை சோனியா அகர்வால் பகிர்ந்த சுவாரஸ்யம்!

'காதல் கொண்டேன்' வெற்றிக்கு காரணம் இது தான்! நடிகை சோனியா அகர்வால் பகிர்ந்த சுவாரஸ்யம்!

 ’காதல் கொண்டேன்’ திரைப்படம் வெறும் ஒரு கோடியில் எடுக்கப்பட்டது என்றாலும் மாபெரும் வெற்றி பெற்றது என நடிகை சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஃபூட் ஸ்டெப்ஸ் புரொடக்ஷன் (Foot Steps Production) தயாரிப்பில் சிவராமன் இயக்கத்தில், சௌரப் அகர்வால் இசையில், சோனியா அகர்வால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ’வில்’ (Will). இந்த திரைப்படத்தை கோத்தாரி மெட்ராஸ் இண்டர்நேஷனல் லிமிட்டெட் இணைந்து வழங்குகிறது. முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகி உள்ள இத்திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அதனால், படத்தின் அறிமுக விழா இன்று சென்னை சாலி கிராமத்தில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இத்திரைப்படத்தின் நடிகைகளான சோனியா அகர்வால் மற்றும் அலக்கியா கலந்து கொண்டனர்.

அப்போது, மேடையில் பேசிய சோனியா அகர்வால், “இந்த படத்தின் பெயர் ‘வில்’ அதாவது தமிழில் ’உயில்’. ஒவ்வொருவர் வாழ்விலும் உயில் எவ்வளவு முக்கியமானது, அதனை எப்படி எழுதுவது மற்றும் பதிவு செய்வது தொடர்பான விவரங்களை விளக்கும் திரைப்படமாக இந்த படம் இருக்கும்.

தயாரிப்பாளர் எனது குடும்ப நண்பர். இந்த படத்தில் நீதிமன்றம் தொடர்புடைய கட்சிகள் இருக்கிறது. நான் நடிக்கும் படங்களை எப்படி தேர்வு செய்கிறேன் என பலர் கேட்கிறீர்கள். நான் பெரிய படம், சின்ன படம் என பிரிந்து பார்க்க மாட்டேன். நான் நடித்த முதல் படம் காதல் கொண்டேன். அந்த படமே வெறும் ஒரு கோடியில் எடுக்கப்பட்ட படம் தான். ஆனால், அது மாபெரும் வெற்றி படமாக அமையவில்லையா? கதை தான் படத்துக்கு முக்கியம். இந்த படமும் கதைகாகவே வெற்றி அடையும் என நம்புகிறேன்” என்றார்.