தூக்கு தண்டனையில் இருந்து தஷ்வந்த் விடுதலை... உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவது என்ன?

தூக்கு தண்டனையில் இருந்து தஷ்வந்த் விடுதலை... உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவது என்ன?

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில், குற்றவாளி தஷ்வந்துக்கு உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்திய மரண தண்டனையை ரத்து செய்து பரபரப்பு தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

பாலியல் வன்கொடுமை செய்து கொலை

சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் பாபு - ஸ்ரீதேவி தம்பதியினரின் 7 வயது மகள் தனது நண்பரின் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திடீரென்று மாயமானர். இது குறித்து சிறுமியின் பெற்றோர், மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த தஷ்வந்த் குழந்தையை கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து பின் எரித்து கொலை செய்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் மீது குண்டர் சட்டத்தின் கீழும் பெருநகர சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். பின்னர், தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம், தஷ்வந்துக்கு 2018-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், இந்த தண்டனை உறுதி செய்ய தீர்ப்பு நகல் ஜூன் 22 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சாட்சியத்தில் குளறுபடிகள்

மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி 2018 ஆம் ஆண்டு தஷ்வந்த் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், ‘சான்று பொருட்கள் பறிமுதல் செய்ததில் விதிமீறல் உள்ளது. சாட்சிகள் முன்னுக்குப்பின் முரணாக சாட்சியம் அளித்ததை மகளிர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், நீதிமன்றத்தில் சட்டப்படி நிரூபிக்கப்படவில்லை. காவல்துறை தரப்பு சாட்சியத்தில் பல குளறுபடிகள் உள்ளன.

நான் தான் குற்றச்செயலை செய்தேன் என நேரடி சாட்சிகள் யாரும் கூறவில்லை. கடைசியாக சிறுமி, தஷ்வந்துடன் தான் இருந்தார் என்ற காரணத்திற்காக, அந்த சிறுமியையை நான் தான் கொலை செய்தேன் என்று காஞ்சிபுரம் நீதிமன்றம் முடிவுக்கு வந்திருப்பது சட்டப்படி ஏற்க முடியாது.

தண்டனையை ரத்து செய்ய கோரிக்கை

குடியிருப்புப் பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும், சிறுமி கடைசியாக அணிந்திருந்த ஆடைகளையும் மாவட்ட காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இதை மாவட்ட நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. முதல் மற்றும் இரண்டாம் சாட்சிகள், காவல் துறையிடம் அளித்த வாக்குமூலத்துக்கும், நீதிமன்றத்தில் சொன்ன சாட்சியத்துக்கும் பல முரண்பாடுகள் உள்ளன. எனவே, தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

உறுதி செய்யப்பட்ட தூக்கு தண்டனை

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், தஷ்வந்த் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றவாளி தஷ்வந்தின் மனநிலை கொலை குற்றத்தை விட கொடூரமாக உள்ளது. அதனால், குற்றவாளியை தண்டிக்காமல் விட்டுவிடுவது நீதியே இல்லாதது போன்ற நிலையை ஏற்படுத்திவிடும். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன.

ஆகையால், தஷ்வந்தின் குற்றத்திற்கு தூக்கு தண்டனையை விட வேறு எந்த தண்டனையும் ஈடாக இருக்காது. இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு என்பதால், தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம்

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் இன்று (அக்.8) தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தஷ்வந்தும் சிறுமியும் சேர்ந்து இருப்பது போன்ற சாதாரண காட்சியை மட்டுமே காவல்துறை சமர்பித்துள்ளது. தஷ்வந்த் மீது சந்தேகப்படும் படியான சிசிடிவி காட்சிகளை சமர்பிக்கவில்லை.

மேலும், சிறுமியின் ஆடையில் இருந்து கிடைத்த முடி, ரத்தம் உள்ளிட்ட ஆதாரங்களை டி.என்.ஏ பரிசோதனை செய்ததில் எந்த தொடர்பும் இல்லை என உறுதியாக தெரிவதாலும், போதிய ஆதாரங்களை அரசு சமர்பிக்க தவறியதாலும் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, உடனடியாக விடுதலை செய்ய உத்தர விட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்புகளில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட கோணத்தில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு

முதலாவதாக, கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எந்த விசாரணையும் செய்யாமல், உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு விளக்கத்தை முழுமையாக கேட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிசிடிவி மற்றும் சாட்சிகள் சரியில்லை என தஷ்வந்த் கூறியதை உயர் நீதிமன்றம் நிராகரித்த நிலையில், குற்றத்தை உறுதி செய்த சிசிடிவி மற்றும் சாட்சிகள் ஆதாரங்களை ஆய்வு செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இறுதியாக, ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்த நிலையில், ஆதாரங்களை மீண்டும் ஆய்வு செய்து உச்ச நீதிமன்றம், குற்றத்தை உறுதி செய்ய தவறிவிட்டதாகக் கூறி, தஷ்வந்தை விடுதலை செய்துள்ளது.

தஷ்வந்த் 2017-ல் வன்கொடுமை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவந்தபோது, அவரது தாயையும் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவரது தந்தை பிறழ்சாட்சியாக மாறிய காரணத்தால், அந்த வழக்கில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.