டிரம்பின் அமைதி முயற்சிக்கு பிறகும் இஸ்ரேல் கொடூர தாக்குதல் - காஸாவில் 57 பேர் உயிரிழப்பு!

டிரம்பின் அமைதி முயற்சிக்கு பிறகும் இஸ்ரேல் கொடூர தாக்குதல் - காஸாவில் 57 பேர் உயிரிழப்பு!

காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்திய பிறகும் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 57 பேர் உயிரிழந்ததாக காஸா பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இருநாடுகளுடனும் அண்மையில் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் ஹமாஸ் அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டிருப்பதாக கூறிய டிரம்ப், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இருப்பினும் நேற்று நள்ளிரவு இஸ்ரேல் காஸா மீது நடத்திய தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மெமுது பஸல் ஏ.எஃப்.பி செய்து நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 57 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காஸாவில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் காஸா பகுதியில் அப்துல் ஆல் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர்” என்றார்.

காஸா பகுதியில் உள்ள அல்- ஷிஃபா மருத்துவமனையின் தலைமை அதிகாரி முகமது அபு சல்மியா ஏ.எஃப்.பி செய்து நிறுவனத்திடம் பேசுகையில், "நேற்று காலை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பேர் உயிரிழந்தனர்" என்றார்.

மேலும் காஸா அருகே உள்ள அல்-ரிமல் பகுதியை சேர்ந்த மெமுது அல்-காஸி பேசுகையில், “காஸா மீதான தாக்குதலை நிறுத்துமாறு டிரம்ப் வலியுறுத்திய பிறகு, இஸ்ரேல் தாக்குதலை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் டிரோன் மூலம் சாமானிய மக்களின் வீடுகளை நேரடியாக குறிவைத்து தாக்குகிறது.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "காஸா மீதான தக்குதலை நிறுத்திக் கொள்வதாக இஸ்ரேல் கூறியுள்ளதாகவும், இந்த தகவல் ஹமாஸ் அமைப்பினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றும் பதிவிட்டுள்ளார்.

எகிப்து விரைந்த அமெரிக்க பிரதிநிதி: இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தாமதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து டிரம்பின் மருமகனும், அமெரிக்க மூத்த பிரதிநிதியுமான ஸ்டீவ் விட்காஃப் எகிப்து நாட்டிற்கு விரைந்துள்ளார். அங்கு பணயக் கைதிகளை விடுதலை செய்வது குறித்தும், இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் முன்வைத்த ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.