‘சாதி ரீதியான படங்கள் அந்த காலத்திலிருந்தே இருக்கு; ஆனால் தற்போது..’ - நடிகர் சரவணன் ஓபன் டாக்

‘சாதி ரீதியான படங்கள் அந்த காலத்திலிருந்தே இருக்கு; ஆனால் தற்போது..’ - நடிகர் சரவணன் ஓபன் டாக்

சாதி ரீதியான படங்கள் அந்த காலத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் இருந்து வருவதாக நடிகர் சரவணன் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேசன் இயக்கி, நடிக்கும் ‘அறுவடை’ (Aruvadai) திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்திகேசனும், கதாநாயகியாக சிம்ரன் ராஜ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். குறிப்பாக, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். தற்போது, நடிகர் சரவணன் இடம் பெறும் காட்சிகள் தொண்டாமுத்தூரில் உள்ள பழைய செங்கல் சூளையில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சரவணன் கூறுகையில், “அறுவடை படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடந்து வருகிறது. இப்படத்தில் எனக்கு நல்ல கேரக்டர். அறுவடை கார்த்திகேசனின் இரண்டாவது படம். நல்ல கதை என்பதால், கதையைக் கேட்டதும் நடிக்க வந்து விட்டேன். படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளன. இது பக்கா கமர்ஷியலான ஒரு ஆக்‌ஷன் திரைப்படம். சாதி சார்ந்த திரைப்படம் இல்லை. ஒரு தனி மனிதனுடைய பிரச்சனை எப்படி சமூக பிரச்சனையாக மாறுகிறது? என்பது குறித்த கதை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சாதி ரீதியான படங்கள் என்பது அந்த காலத்திலிருந்தே தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. அது நல்ல படமாக இருந்தால் வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். அந்த காலத்தில் கேள்வி கேட்கும் மீடியா அதிகளவில் இல்லை. இப்போது எல்லோரும் கேள்வி கேட்கிறார்கள். அனைவருமே கையில் ஒரு கேமரா, மைக்கை எடுத்துக் கொண்டு வந்து விடுகின்றனர். அந்த அளவிற்கு ஊடகம் பெருத்துவிட்டது.‌ அதனால் கேள்விகளும் அதிகரித்துவிட்டது.

மேலும், சிறிய அளவிலான பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுக்க வேண்டும்.

அதேபோல, சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவது என்பது காலங்காலமாக சினிமாவில் நடந்து கொண்டுள்ளது. எப்போதும் சிறிய அளவு பட்ஜெட் படங்கள் ஓடி தான், பெரிய படங்களாக மாறும். அதில் பணியாற்றியவர்கள் தான் பெரிய மனிதர்களாக மாறுவார்கள். இது வழி வழியாக நடந்து கொண்டிருக்கும் விஷயம். ஆனால், தற்போது ஒரு திரைப்படம் ஓடுவது என்பதே கடவுளின் அருள். கடவுள் அருள் பெற்றவன் ஜெயிப்பான். மேலும், பருத்திவீரன் போல ஒரு கதாபாத்திரம், கடவுள் அருள் இருந்தால் சீக்கிரம் கிடைக்கும்” என்றார்.