“குறைவான காட்சிகளில் நடித்தாலும் நிறைவாக மகிழ்கிறேன்” - ‘காந்தாரா சாப்டர் 1’ நடிகர் சம்பத்ராம் நெகிழ்ச்சி!

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படத்தில் குறைவான காட்சிகளில் நடித்தாலும் நிறைவாக நினைத்து மகிழ்வதாக முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்திருக்கும் நடிகர் சம்பத்ராம் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2022இல் வெளியான காந்தாரா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது அதன் முன் கதையாக ‘காந்தாரா சாப்டர் 1’ வெளியாகியுள்ளது. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடிக்க, சம்பத்ராம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மேக்கப்பிற்காக மட்டும் தினமும் இரண்டரை மணி நேரம் ஒதுக்க வேண்டியிருந்ததாக கூறியுள்ளார் அவர்.
இந்த படம் குறித்து பத்திரிகையாளர்களிடம் நடிகர் சம்பத்ராம் பேசியபோது, “மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்கிற ‘காந்தாரா சாப்டர் 1’-இல் நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மலைவாழ் மக்களின் தலைவனாக குறைவான காட்சிகளில் மட்டுமே வந்தாலும், நிறைவாகவும் பெருமையாகவும் நினைக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து தனது கதாபாத்திரம் குறித்து விளக்கிய அவர், “இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறேன். முதுமையாக இருப்பது போன்று முகத்திற்கு மேக்கப் போட்டிருப்பேன். அதற்கே ஒன்றரை மணிநேரம் ஆகும். அதனை கலைப்பதற்கு ஒரு மணிநேரம் எடுக்கும். மிகவும் சிரமப்பட்டு நடித்தாலும், இவ்வளவு பெரிய பான் இந்தியா படத்தில் நடிக்க எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
ரிஷப் ஷெட்டியுடனான நட்பு குறித்து பேசியபோது, “கன்னடத்தில் 'சயனைடு' என்ற படத்தில் முதன்முதலில் நடித்தேன். அந்த படத்தை ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கி இருந்தார். அவருடைய ‘வீரப்ப அட்டஹாச’ படத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தபோது அதில், கடைசி அசிஸ்டெண்ட்டாக ரிஷப் ஷெட்டி பணியாற்றினார். அப்போதிருந்து எனக்கும் அவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அவர் இயக்கிய ‘காந்தாரா’ படம் வெளியானபோது, நான் போன் செய்து அவரை பாராட்டினேன். ‘காந்தாரா சாப்டர் 1’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்துவிட்டு, ஒரு வருடத்திற்கு முன்பு அவருக்கு போன் செய்து, ‘இந்த படத்தில் நான் நடித்தால் சந்தோஷப்படுவேன்’ என்று சொன்னேன். உடனே அழைத்து எனக்கு வாய்ப்பு கொடுத்தார்.
இருந்தாலும் இந்த படத்தின் கெட்டப்பிற்காக எனக்கு ஒன்றரை மணி நேரம் மேக்கப் செய்து பார்த்த பின்னரே ஒப்பந்தம் செய்தார். கிட்டத்தட்ட இந்த படத்திற்காக ஒரு வருடம் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் என மொத்தம் 26 நாட்கள் நடித்திருக்கிறேன். நிறைய பணியாளர்களை வைத்து மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.